இறுதி கட்டப் பணிகள் விறுவிறு புதுப்பொலிவு பெறுகிறது தொல்காப்பியர் பூங்கா: 600 பேர் நின்றாலும் ஒன்றும் ஆகாது
சென்னை: சென்னை தொல்காப்பியர் பூங்கா புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2007ம் ஆண்டு அடையாறு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘தொல்காப்பியர் பூங்கா’ அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு 2011ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என பெயர் மாற்றம் செய்தது. அங்கு தொல்காப்பியர் பூங்கா என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பூங்காவை பார்வையிட்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். பின்னர் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பியர் பூங்கா என பெயரிடப்பட்டது. அந்தப் பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவாயிலில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2023 ஜூன் மாதம் ரூ.20 கோடியில் தொல்காப்பியர் பூங்காவை மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பூங்காவின் நடைபாதை, பூங்கா முகப்பு சீரமைப்பு, பார்வையாளர்கள் இடம், குழந்தைகள் உரையாடும் இடம், பார்வையிடும் இடம், பார்வையாளர்கள் கோபுரம், கண்காட்சி பகுதி என மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த 2023 மே மாதம் 23ம் தேதி தொல்காப்பியர் பூங்காவில் ரூ.9.35 கோடியில் தொங்குபாலம் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி அளித்தது.
அதன்படி இந்த பூங்காவை 58 ஏக்கர் பரப்பளவில் விரிவுப்படுத்தி பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. இப்பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் நடைபாதை, முகப்பு சீரமைப்பு செய்தல், குழந்தைகள் விளையாட்டு திடல், உயர் பார்வையாளர் கோபுரம், கண்காட்சி பகுதி என்று பிரம்மாண்டமான முறையில் பூங்காவை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பூங்காவின் சிறப்பம்சமாக ரூ.9 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் தொங்கு பாலம் கட்டி முடக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அடையாறு முகத்துவாரம் செல்லும் வகையிலும், தொல்காப்பியர் பூங்காவின் கட்டடம் 1 மற்றும் கட்டடம் 2 ஆகியவற்றை இணைக்கும் விதத்திலும் பசுமைவழிச் சாலையின் குறுக்கே இந்த ஸ்கைவாக் நடைமேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு கூடுதல் வசதிகள் இந்த பூங்காவில் செய்யப்பட்டுள்ளது. அடர்த்தியான மரங்கள், செடி கொடிகள் சூழ்ந்து அடர்ந்த வனம் போல் இப்பூங்கா காட்சியளிக்கிறது. மேலும் அடையாறு ஆறு ஓரமாக நடைபயிற்சி செல்லும் வகையில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பசுமைவழிச் சாலையின் குறுக்கே தொங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
160 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 600 பேர் நின்றாலும் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆய்விற்கு பிறகு விரைவில் தொங்கு பாலம் திறக்கப்படவுள்ளது. பூங்காவிற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சென்னை நகரின் புதிய அடையாளங்களில் ஒன்றாக, ‘’தொல்காப்பியர் பூங்கா’’ அமையும்.