Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். எந்த பாதிப்பும் இருக்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர் சங்கம் சார்பாக கடந்த ஆண்டு, ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கார்ப்பரேட் சார்பு பொருளாதார சீர் திருத்தங்கள் மற்றும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் இணை அமைப்புகள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக அரசு தொழிலாளர் ஆண்டு மாநாட்டை அரசு நடத்தவில்லை.

தொழிலாளர் நலனுக்காக முரணான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. கூட்டு பேரம் பேசுவதை பலவீனப்படுத்தவும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்குதல் என்ற பெயரில் முதலாளிகளுக்கு சாதகமாகவும் நான்கு தொழிலாளர் குறியீடுகளை விதிக்க முயற்சிக்கின்றது. அரசானது நாட்டின் நலனில் கவனம் செலுத்தாமல் வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றது.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளை தனியார்மயமாக்குதல், அவுட்சோர்சிங் கொள்கைகள், ஒப்பந்ததாரர்மயமாக்கல் மற்றும் பணியாளர்களை தற்காலிகமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி, காப்பீடு, தபால்துறை முதல் நிலக்கரி, சுரங்கம், நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானம் வரையிலான பல்வேறு துறைகளை சேர்ந்த 25கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் இன்று தமிழகத்தில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய அரசை கண்டித்து இன்று தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

இந்த வேலைநிறுத்தத்தில் அரசு அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கலாம். இதனால் மக்களின் அன்றாட பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம். இந்த வேலைநிறுத்தத்திற்கு பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் தொமுச , சிஐடியு , ஏஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர் , நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது.

மாநகர் போக்குவரத்து கழக ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர்கள் முழு அளவில் இன்று பணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். ஒப்பந்த அடிப்படை ஓட்டுநர்களே 1500 பேர் இருக்கின்றனர் , 2 ஆயிரம் ஓட்டுநர்கள் இருந்தாலே பேருந்துகளை முழு அளவில் இயக்கிவிட முடியும். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் நாள்தோறும் 3200 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.