Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூரில் பாஜ, அதிமுக முகவர்கள் வாக்குவாதம்

திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 வாக்குகள் பதிவானது. இது 70.58 சதவீத ஆகும். வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையமான எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக காலை 6 மணியில் இருந்து முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பலத்த சோதனைக்கு பிறகு அடையாள அட்டைகள் பரிசோதனை செய்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது.

தபால் வாக்குகள் பிரிக்கப்பட்ட இடத்தில் பாஜ முகவர்கள் 4 பேர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களை முன்புறம் அனுமதிக்காமல் நின்றதால், அவர்களிடம் அதிமுக முகவர்கள் தங்களை முன் வரிசையில் நிற்க அனுமதிக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.