திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி டிஎஸ்பி, கோசாலை இயக்குனரின் அலட்சியமே இறப்புக்கு காரணம்: விசாரணை கமிஷன் அறிக்கை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி நடைபெற்ற வைகுண்ட ஏகாதசிக்கான சுவாமி தரிசன டிக்கெட் பெற வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் சிறப்பு விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்.
இந்த விசாரணை கமிஷன் மாநில அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. அதில் வைகுண்ட ஏகாதசி கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது திருப்பதி தேவஸ்தான கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி மற்றும் டிஎஸ்பி ஏ.வி. ரமண குமார் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை சரியாகப் பின்பற்றவில்லை.
அவர்கள் இருவராலும் கூட்டத்தை சரியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் இருவரும் அலட்சியமாக பூங்கா கேட்டைத் திறக்க உத்தரவிட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 2 ஆம்புலன்ஸ்கள் இருந்தபோதிலும், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப முடியவில்லை. இதன் விளைவாக 6 பேர் இறந்தனர். எனவே இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க விசாரணை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.