Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசாலா வடை: பக்தர்கள் ருசித்து சாப்பிட்டனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசாலா வடை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக கடந்த 1985ம் ஆண்டு நித்ய அன்னபிரசாத திட்டத்தை அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமியை தரிசனம் செய்தபிறகு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு படிப்படியாக அதிகளவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோயில் எதிரே பிரம்மாண்டமான தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.

இதேபோல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் திருமலையில் பக்தர்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சாம்பார் சாதம், தயிர்சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. இதுதவிர தேவஸ்தான கல்வி நிறுவனங்கள், பத்மாவதி தாயார் கோயில், தேவஸ்தான மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக தொடங்கப்பட்ட வெங்கடேஸ்வரா நித்ய அன்னபிரசாத அறக்கட்டளைக்கு இதுவரை பக்தர்கள் மூலம் ₹2 ஆயிரம் கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதனை வங்கியில் டெபாசிட் செய்து அதில் வரக்கூடிய வட்டி தொகையை வைத்து அன்னபிரசாத திட்டத்தை தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது.

நாளொன்றுக்கு ₹44 லட்சம் செலவில் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. காலையில் பொங்கல், இட்லி, சட்னி, சாம்பாரும், மதியம் சாதம், சாம்பார், ரசம், மோர், சர்க்கரை பொங்கல், பொறியல், சட்னி ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்னதான சத்திரத்தில் பக்தர்களுக்கு வெங்காயம் இல்லாத மசாலா வடை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அந்த திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அலுவலர் சியாமளாராவ், கூடுதல் செயல் அலுவலர் வெங்கய்யசவுத்ரி ஆகியோர் இணைந்து மசாலா வடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். சுடச்சுட பரிமாறப்பட்ட மசாலா வடைகளை ருசித்து சாப்பிட்ட பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 63,285 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 20,829 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ₹3.11 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 8 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.