Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்: 7ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா நாளை (சனி) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 7ம் தேதி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ள இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்தல புராணத்தை உணர்த்தும் விழாவாக கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் நடைபெறுகிறது.

அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா நடந்தாலும் புராண காலத்தில் திருச்செந்தூரில் தான் சூரசம்ஹாரம் நடந்தது என்பதால் இங்கு வந்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம். இதனால் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களிலும் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதும், விரதம் இருப்பது வழக்கமாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

2ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான 6ம் திருநாளான நவ. 7ம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி, கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7ம் திருநாளான திருக்கல்யாணத்தை முன்னிட்டு நவ. 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடும், காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து, சுவாமி - அம்மன் தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், திருக்கோயிலில் இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடக்கிறது.

* தற்காலிக பந்தல்கள்

முந்தைய காலங்களில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கோயில் உள்பிரகாரங்களிலும், வெளி கிரிப்பிரகாரங்களிலும் தங்கி இருப்பர். மேலும் கோயிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதியில் உள்ள மடங்களில் தங்கி விரதம் இருந்து நாள்தோறும் யாகசாலையில் முருகனை வழிபட்டு வருவார்கள். காலப்போக்கில் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவதால் கோயிலுக்கு வெளியே விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பந்தல்கள் அமைக்கப்படுகிறது. திருக்கோயில் வளாகத்தில் 18 இடங்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 118 சதுர அடி பரப்பளவில் தற்காலிக நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.