Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் கடலில் பக்தை தவறவிட்ட 5 பவுன் தங்கச்சங்கிலி: 5 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்ட கடலோர பாதுகாப்புக்குழு

தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடலில் புனித நீராடிய போது பெண் ஒருவர் தொலைத்த 5 பவுன் தங்கச்சங்கிலி நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 மணி நேரம் போராடி தங்கச்சங்கிலியை மீட்டு கொடுத்த கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணியம் சுவாமி கோயிலில் தினமும் பல்லாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குவிந்தனர். இவர்களில் தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி, தமது சகோதரி வாசுகி உடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்திருந்தார். அவர்கள் அனைவரும் புனித நீராடியுள்ளனர். அப்போது வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் விழுந்து கடற்கரை மணலில் புதைந்து போனது.

இதனால் பதறிப்போன ஜோதி தனது கணவர் உதவியுடன் உடனடியாக திருச்செந்தூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தங்கச்சங்கிலி தொலைந்து இடத்துக்கு 50க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழுவினர் விரைந்தனர். அவர்கள் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து தங்கச்சங்கிலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5மணி நேர போராட்டத்துக்கு பிறகு தொலைந்து போன தங்கச்சங்கிலி மீட்கப்பட்டது.

இதனையடுத்து அந்த தங்கச்சங்கிலியை கடலோர பாதுகாப்பு குழுவினர் திருச்செந்தூர் புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் புகார் அளித்த ஜோதி குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்து தொலைந்து போன தங்கச்சங்கிலியை ஒப்படைத்தனர். தங்கச்சங்கிலியை நீண்ட நேரம் போராடி மீட்டு கொடுத்த கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.