கிருஷ்ணகிரி: டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஜல்லி கற்களுக்குள் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் எம் சாண்ட் கலவைகளை ஏற்றி கொண்டு சோக்காடி வழியாக ஜம்புத்தூர் என்ற கிராமத்திற்கு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சோக்காடி கிரமான நிர்வாக அலுவலகம் எதிரே ஜம்புத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் திரும்பும் போது அங்குள்ள கழிவுநீர் கால்வாயின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் மூடி லாரியின் பாரம் தாங்காமல் உடைந்துள்ளது.
இதனால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த சோக்காடி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மனைவி பொன்னம்மாள் மற்றும் குல்லன்கோட்டா என்ற பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோர் ஜல்லி மற்றும் எம் சாண்ட் கலவைகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சோக்காடி பகுதியை சேர்ந்த 65 வயது முதியோரான பொண்ணுகன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி காவல்துறையினர் இறந்த இருவரது உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.