தூத்துக்குடியில் ரூ.1300 கோடி முதற்கட்ட முதலீட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தூத்துக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.8.2025) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 16,000 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, பதினெட்டு மாதங்களுக்குள் முதற்கட்டமாக, 1300 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட அடுத்த மாதத்திலேயே, அதாவது பிப்ரவரி 2024 மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட 18 மாதங்களில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் இத்திட்டத்தின் முதற்கட்ட உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பல துறைகளில் சிறந்து விளங்கும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின் குழுமத்தின் ஒரு அங்கமான வின்ஃபாஸ்ட் நிறுவனம், தனது புதிய அதிநவீன மின் வாகன உற்பத்தி ஆலையை, தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற் பூங்காவில் அமைத்துள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்த ஆலையில், ஆண்டுக்கு 50,000 கார்கள் உற்பத்தி செய்யும் அளவிற்கான தொழிற்சாலையை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மட்டும் இருந்து வரும் நிலையில், முதல் முறையாக தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பெரும் தொழில் திட்டம் இப்பகுதியின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்கும்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணண், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஃபாம் சான் சவ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி. மார்க்கண்டையன், எஸ்.அமிர்தராஜ், சி.சண்முகய்யா, காதர்பாட்சா முத்துராமலிங்கம், அப்துல் வகாப், மருத்துவர் நா.எழிலன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு.அலர்மேல்மங்கை,தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் திட்ட இயக்குநர் பிரகலாதன் திரிபாதி, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.