Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.32.50 கோடியில் இரண்டாம் மலைப்பாதை திட்ட பணிகள்: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் மலைப்பாதை திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பாதை அமைக்கப்பட்டு மலைக்கோயிலுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக ஒரே மலைப்பாதை மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால், காலப்போக்கில் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

கோயிலில் நடைபெறும் விழாக்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் மலைப்பாதையில் வாகனங்கள் வந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க வாகனங்கள் மலையிலிருந்து செல்லும் வகையில் இரண்டாம் மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு திருத்தணி முருகன் கோயிலில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து இரண்டாம் மலைப்பாதை திட்டம் செயல்படுத்துவது குறித்த சாத்தியகூறுகளை ஆய்வு செய்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, மலை அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு 1,200 மீட்டர் நீளத்தில் 2வது மலைப்பாதை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

அதன்பேரில் கோயில் நிதியிலிருந்து ரூ.32.50 கோடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், 2ம் மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவண செல்வன் நேற்று ஆய்வு செய்தார். மலை அடிவாரத்திலிருந்து மலைக் கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டம் செயல்படுத்துவது தொடர்பான வரைபடம் மூலம் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், சித்தூர் சாலை வழியாக ரூ.57.50 கோடி மதிப்பீட்டில் மாற்று மலைப்பாதை திட்டப் பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு, திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், ஒப்பந்ததாரர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் மேம்படுத்தும் வகையில் வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.86.87 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளர்ச்சி திட்டத்தின் கீழ் அன்னதானக் கூடம் விரிவுபடுத்தும் பணி, ராஜகோபுரம் தேர் வீதி இணைப்பு படிகள், திருமண மண்டபங்கள், தேர் புனரமைப்பு, பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய வசதிகள், மாற்று மலைப்பாதை திட்டம், 2ம் மலைப்பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.