திருப்போரூர்: திருப்போரூர் கால்நடை மருத்துவமனைக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூரில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், இள்ளலூர், ஈச்சங்காடு, காயார், வெண்பேடு, தண்டலம், ஆலத்தூர், மடையத்தூர், சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் தங்களின் வளர்ப்பு உயிரினங்களான ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவற்றை சிகிச்சைக்கும், செயற்கை கருவூட்டலுக்கும் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு கடந்த 2004ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட்டது. ஆனால், மருத்துவமனையை முறையாக பராமரிக்காகதால் கட்டிடத்தின் கதவுகள், ஜன்னல்கள் போன்றவை உடைந்து காணப்படுகிறது. மாடுகளுக்கு சிகிச்சை அளித்தல், சினையூட்டல் போன்ற பணிகளை செய்யும் மையத்தின் உபகரணங்கள் உடைந்து காட்சி அளிக்கின்றன. இந்த அமைத்தின் தூண்கள், சிமென்ட் கூரை போன்றவை உடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலை காணப்படுகிறது. மேலும், கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி சுவர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இங்கு வேலை செய்த உதவியாளர்கள் ஓய்வு பெற்று விட்டதால், ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டும் அங்கு வரும் விவசாயிகளின் உதவியுடன் அனைத்து உயிரினங்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவமனைக்கு தேவையான தண்ணீர் வசதியும் இல்லை. ஆகவே, மாவட்ட நிர்வாகம் இந்த கால்நடை மருத்துவமனைக்கு தேவையான கட்டிட பராமரிப்பு, சிகிச்சை மைய பராமரிப்பு, கதவுகள் சீரமைப்பு, குடிநீர் வசதி, கூடுதல் பணியாளர்கள் போன்றவற்றை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.