மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தேவாரம், திருமுறை, பண்ணிசை ஒலிக்க ஓதுவார்கள், பெண் ஓதுவார்கள் பங்கேற்க தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடைபெற்றதில் மகிழ்ச்சி. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப 7 நிலை ராஜகோபுரம், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளுக்கு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது. டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பக்தர்கள் வசதிக்காக எல்இடி திரை, குடிநீர், உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் குடமுழுக்கு சிறப்பாக நடந்துள்ளது. இனம், மதம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு இடையே சட்டம்-ஒழுங்கு, அமைதியுடன் குடமுழுக்கு நடந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 3,347 திருக்கோயில்களில் குடமுழுக்கு கண்டுள்ளோம். தமிழ் கடவுள் முருகனுக்கு மட்டும் 124 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.