திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாத காரணத்தால் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கொசுக்களை அழிப்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை.
சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை, பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட நகராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும் அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் வரும் 25ம் தேதி மாலை 4 மணியளவில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.