திருக்குறள் முற்றோதிய 122 மாணவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.15,000/-க்கான காசோலையும், சான்றிதழும் ஆக.4ம் தேதி வழங்குகிறார் அமைச்சர் சாமிநாதன்
சென்னை: திருக்குறள் முற்றோதிய 122 மாணவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.15,000/-க்கான காசோலையும், சான்றிதழும் ஆகஸ்ட்.4ம் தேதி அமைச்சர் சாமிநாதன் வழங்குகிறார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாகரிகத்திற்குத் தமிழினத்தின் பங்களிப்புகள் பல, அவற்றுள் இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், ஒன்று தமிழிசை, மற்றொன்று திருக்குறள். தமிழில் மிகச் சில சொற்களில் ஆன கவிதை வடிவம் குறள் வெண்பா ஆகும். மிக விரிந்த உலகச் சிந்தனைகளை மிகக் குறுகிய வடிவத்தில் தரமுடியும் என்பதை உலக இலக்கிய அரங்கில் முதலில் திருவள்ளுவரே செய்து காட்டினார் எனலாம். திருவள்ளுவர் மழலையின் சிரிப்பு முதல் மெய்யுணர்தல் வரை மனிதனுக்குச் சிந்தனைகளை அளவிற்சிறிய தம் குறளில் வழங்கியுள்ளார்.
மாணவச் செல்வங்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், கலைஞரால் குறள் பரிசுத் திட்டம் கடந்த 2000 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த 70 மாணவ மாணவியர்களுக்கு ரூ.10,000/- குறள் பரிசுத் தொகையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வந்தன. கலைஞர் அடியொற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பு நீக்கப்பட்டு குறள் ஒப்பித்தல் செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் குறள் பரிசுத்தொகை தலா ரூ.10,000/- வீதம் வழங்க ஆணையிடப்பட்டது. அவ்வகையில் 2022-ஆம் ஆண்டு 219 மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
மாணவர்களுக்குத் திருக்குறள் மீதான ஆர்வத்தை மேலும் கூட்டிடும் வகையில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-2023-ஆம் ஆண்டு முதல் ரூ.10,000/-த்திலிருந்து ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய திருக்குறளின் சிறப்புகள் ஏட்டளவில் நின்றுவிடாமல் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கேதுவாக திருக்குறளை மையமாகக் கொண்டு செல்வி வர்சா ராஜ்குமார் குழுவினரின் சங்கத்தமிழ் நாட்டிய நாடகம், தஞ்சை ஆடுதுறை பாஸ்கர் குழுவினரின் திருக்குறள் நாடகம், கலைமாமணி பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், கலைநன்மணி கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெறவுள்ளன.
ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையின் வளத்தக்க சிந்தனைகளை வாழ்வியல் சூழலோடு இணைத்து வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஓர் அற்புதத் திருவிழாவாக இந்நிகழ்ச்சி 04.08.2025 (திங்கள்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு சென்னை, அடையாறு திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் அரங்கம் முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருக்குறள் முற்றோதல் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பப் பக்கத்தை திறந்துவைத்து விழாப்பேருரை ஆற்றவுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் இராஜாராமன், இ.ஆ.ப., முன்னிலையுரையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் வரவேற்புரையும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் கு.ப. சத்தியபிரியா நன்றியுரையும் ஆற்றவுள்ளனர்.
ஏழிசையும் பல்கலையும் கலந்து மணக்கும் இத்தமிழ்க் கலை விழாவில் பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போல தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரால் , திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற சென்னை (2), திருவள்ளூர் (9), காஞ்சிபுரம் (1), வேலூர் (1), கிருஷ்ணகிரி (1). திருவண்ணாமலை (2), விழுப்புரம் (3), கடலூர் (9), அரியலூர் (2) சேலம் (5) நாமக்கல் (2) ஈரோடு (2) கரூர் (1), கோயம்புத்தூர் (2), திருப்பூர் (1), நீலகிரி (1), திருச்சிராப்பள்ளி (4). சிவகங்கை (8), தஞ்சாவூர் (6), திருவாரூர் (2). நாகப்பட்டினம் (8), இராமநாதபுரம் (4), மதுரை (1), திண்டுக்கல் (1), தேனி (3), விருதுநகர் (12).
திருநெல்வேலி (2), தூத்துக்குடி (1), கன்னியாகுமரி (6), செங்கற்பட்டு (15). இராணிப்பேட்டை (1), தென்காசி (3), மயிலாடுதுறை (1). ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 122 பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.15,000/-க்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளன. செம்மொழித் தமிழ் மீதும் உலகப் பொது முறையான திருக்குறள் மீதும் தீராப்பற்று கொண்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும், அய்யன் திருவள்ளுவரின் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும் இந்நிகழ்ச்சிகள் அமையவுள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.