தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 55 வழக்குகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில், செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில், ஜி.ஜே.மல்டி கிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவன வளாகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் அழிக்கும் பணி நேற்று நடந்தது.
இதில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க ப்பிரிவு, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பள்ளிக்கரணை மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஆகிய காவல்நிலையங்களில் 55 குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.25 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையர் சத்தியசீலன், ஆய்வாளர்கள் சதீஷ், தினேஷ், ஸ்ரீதேவி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.