திருவனந்தபுரம்: தேக்கடி அருகே கால்வாய்க்குள் தவறி விழுந்து பலமணி நேரமாக போராடிய காட்டு யானையை பொதுப்பணித்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கேரளாவின் முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆனவச்சல் கால்வாய் மூலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த கால்வாயை கடக்க முயன்ற யானை ஒன்று கால்வாய்க்குள் தவறி விழுந்துள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்பை ஒட்டியுள்ள குப்பைகளை வடிகட்டும் வடிகட்டி முன் சிக்கி கொண்டு அந்த யானை தப்பிக்க முடியாமல் தவித்துள்ளது. இதையறிந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் தண்ணீர் வெளியேறும் ஷட்டரை இறக்கி தண்ணீரின் அளவை குறைத்தனர். இதனால் அந்த யானை எதிர் நீச்சல் அடித்து கரையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. பலமணி நேரமாக உயிருக்கு போராடிய யானையை தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.