Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியம்; தேனீக்கள் அழிவால் விவசாயத்தில் குறைந்து வருகிறது 60 சதவீத மகசூல்: பூச்சியியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

சுறுசுறுப்பிற்கும், ஒற்றுமைக்கும் உதாரணமாக காட்டப்படும் ஒரு அரிய உயிரினம் தேனீ. பூக்களில் இருந்து தேனை உறிஞ்சி மகரந்த சேர்க்கைக்கு பெரும்பங்காற்றும் ஈக்கள் என்பதால் தேனீக்கள் என்று அழைக்கப்படுகிறது. மரம், செடி, கொடிகள் தங்களது அடுத்த சந்ததிகளை உருவாக்கிட முக்கிய காரணமாக இருப்பது தேனீக்கள். தேனீக்கள் தேன் எடுப்பதற்காக பூக்களில் அமரும்போது தான் அயல்மகரந்த சேர்க்கை நிகழ்கிறது. இதனால் பூக்கள் காய்களாகிறது. பூக்கள் காய்களாக மாறி விதைகள் உருவாகாவிட்டால் செடிகள் மலட்டுத்தன்மை அடைந்து விடும். இந்தவகையில் தேனீக்கள் தொடர்ந்து மகரந்த ேசர்க்கை பணியை செய்வது தான் மரம், செடி, கொடிகளின் வளர்ச்சிக்கான ஆதாரமாக திகழ்கிறது. ஆனால் சமீபகாலமாக தேனீக்கள் நமது கண்களில் அதிகம் தென்படுவதில்லை. அதனை நண்பர்களாக பார்க்க வேண்டிய விவசாயிகளே சில இடங்களில் அழித்து விடுகின்றனர்.

நாளுக்கு நாள் மாறி வரும் அபாயகரமான இயற்கை சூழலில் கிராமங்கள் மட்டுமல்ல, நகரங்களிலும் தேனீக்கள் இருக்க வேண்டும். இதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 19ம்தேதி தேசிய நகர்ப்புற தேனீவளர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேனீக்கள் குறித்த பல்வேறு வியத்தகு தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக தேனீவளர்ப்பு என்பது மகசூல் அதிகரிப்புக்கு பெரும் பங்கு வகிக்கும் என்கின்றனர் பூச்சியியல் நிபுணர்கள். இதுகுறித்து பூச்சியியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் கூறியதாவது: வேளாண்மை தான் நமது நாட்டின் முதுகெலும்பு. இப்படி முதுகெலும்பான விவசாயத்திற்கு துணை நிற்கும் தேவதைகள் தேனீக்கள் என்றால் அது மிகையல்ல. அயல்மகரந்த சேர்க்கைக்கு பெரும் வங்கு வகிப்பவை தேனீக்கள். இது முறையாக நடந்தால் மட்டுமே விவசாயத்தில் அதிகமகசூல் கிடைக்கும்.

மக்காச்சோளம், சோளம், ஏலக்காய், கொய்யா, பப்பாளி, தக்காளி, கத்தரி, பாகற்காய், பூசணிக்காய், மாங்காய், பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் தேனீக்கள் வளர்ப்பால் 30 முதல் 40 சதவீதம் மகசூல் கூடும். தேனீக்கள் இல்லாததால் இதுபோன்ற பயிர்களில் தற்போது 5டன் கிடைக்க வேண்டிய மகசூல், 2டன் என்ற அளவில் மட்டுமே கிடைக்கிறது.தேனீ வளர்ப்பு என்பது விவசாயத்தில் ஒரு சிறிய தொழில்நுட்பம். இதை செய்வதால் மகசூல் பன்மடங்கு அதிகரிக்கிறது. தேனீக்கள் வளர்வதற்கு பூக்கள் வேண்டும். அதற்கு விவசாயம் நடக்க கூடிய தோட்டம் வேண்டும். ஒவ்வொரு பூவிலும் மதுரமும், மகரந்ததூளும் வேண்டும். இரண்டும் இருந்தால் மட்டுமே தேனீக்கள் வாழ முடியும். பப்பாளி, பனைமரத்திலும், பூசணி, பாகற்காய், சுரக்காய் போன்ற பயிர்களிலும் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும்.

ஆண்பூவில் உள்ள மகரந்த தூளை எடுத்துக் கொண்டு, அதை ெபண்பூவில் உள்சூல்முடியில் வைக்கவேண்டும். இந்த வேலையை மிகச்சரியாக செய்பவை தேனீக்கள் தான். அவ்வாறு செய்யும் போது விதை உருவாகி பூ நிலைத்து நிற்கும். உதிராமலும், கொட்டாமலும் இருக்கும். இந்தவகையில் தான் மகசூல் கூடுகிறது. இந்த முறையில் விளையும் காய்கறிகளும், பழங்களும் மிகவும் ருசியாக இருக்கும். தேனீக்கள் இல்லாததால் 60 சதவீதம் வரை மகசூல் குறைகிறது என்று ஏற்கனவே வேளாண் விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. அதுவே வறட்சிக்கும் ஒரு காரணமாக அமைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிராமங்கள் மட்டுமன்றி நகர்ப்புறங்களிலும் தேனீக்கள் வளர்ப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. இதை உணர்ந்து தேனீக்களை அழித்தொழிப்பதை தவிர்க்க வேண்டும். வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.

பன்முகத்தன்மை குறைந்து வருகிறது

இன்று உலகில் 20000 வகைத் தேனீக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்டார்டிகா தவிர, அனைத்து கண்டங்களிலும் காணப்படும் சிறு பூச்சி இனம் தேனீக்கள். இவற்றால்தான் தாவரங்களில் மகரந்த சேர்க்கை உருவாகி தாவர இனங்கள் பெருகுகின்றன. தேனீக்கள் கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் முப்பதாயிரம் முதல் 40,000 வரை தேனீக்கள் இருக்கும். ஆனால் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் வாழும் தேனீக்கள் இன்றைய நவீன உலகில் பல விதமான சவால்களை எதிர்கொண்டுள்ளன. பூமி வெப்பமயமாதல், வானிலை மாற்றம், திடீர் பருவக் கோளாறுகள், காற்றில் அதிகரித்து வரும் மாசு, விளை நிலங்களில் அதிக அளவில் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் உபயோகித்தல், காடுகளை அழித்தல், மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை பயிரிடுதல், புதிய வகை நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கையும், தேனீ வகைகளின் பன்முகத் தன்மை குறையும் அபாயமுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரமான தேன் கிடைப்பதில்லை

தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, பாறைத்தேனீ, கொசுத்தேனீ என்று 4வகைகள் உள்ளன. அனைத்து தேனீக்கள் சேகரிக்கும் தேன்களும் பயனுள்ளவை. ஆனாலும் சிறிய அளவிலான கொசுத்தேனீக்கள் சேகரிக்கும் தேன்வகைகள் மிகுந்த சுவையுடையது. இதில் மருத்துவ குணமும் அதிகம். ஆனால் சமீபகாலமாக இதுபோன்ற தரமான தேன் கிடைப்பதில்லை. மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு தீர்வு தருவது தரமான தேன். ஆனால் தற்போது கலப்படமே அதிகளவில் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை தேனீக்களின் எண்ணிக்ைக அதிகளவில் இருந்தது. ஆனால் தற்போது எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. விவசாயிகள் வீரியம் மிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதே இதற்கு காரணம். எனவே விவசாயிகள் தேனீக்களை பாதுகாத்து வளர்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.