Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தரங்கம்பாடியில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட விரோதமான சுருக்குமடி, இரட்டைமடி வலை, அதிவேக எஞ்சினை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர்கள் கிராமங்கள் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமாடி, இரட்டைமடி, அதிவேக குதிரைத்திறன் கொண்ட எஞ்சின்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சுருக்குமாடி, இரட்டைமடி வலை பயன்படுத்தும் 75 படகுகள் மாவட்டத்தில் உள்ளன. இதனால் மீன் வளம் பாதிக்கப்படுவதாகவும், மற்ற மீனவர்கள் மீன் படிப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், சின்னமேடு, வானகிரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தரங்கம்பாடி கடை வீதியில் டென்ட் அமைத்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குநர், தரங்கம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களின் கோரிக்கையை கூடிய விரைவில் நிறைவேற்றி தருவதாக உத்திரவாதம் அளித்தனர்.