Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெஸ்ட்டில் இந்திய அணியை வழி நடத்த கில் தயாராக உள்ளார்: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பேட்டி

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 20ம் தேதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணியை சுப்மன்கில் வழிநடத்த உள்ளார். அனுபவ வீரர்கள் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி இல்லாத நிலையில் இங்கிலாந்தில் இளம்வீரர்கள் கொண்ட இந்திய அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அளித்துள்ள பேட்டி:

ஜடேஜா, அஸ்வின், ஆகியோர் இணைந்து டெஸ்ட்டில் பல சாதனைகளை செய்து உள்ளனர். தற்போது அஸ்வின் ஓய்வு பெற்று விட்டார். அவர்கள் இருவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். அவருடன் இணைந்து விளையாடுவது எனக்கு பெருமையான விஷயமாக கருதுகிறேன். நான் அவரிடம் அதிக நேரம் செலவழித்து வருகிறேன். இங்கிலாந்தில் எப்படி பந்து வீசுவது என்பது குறித்து அவரிடம் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்.

எப்போதும் பேருந்தில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ரோகித் இடத்தை பேருந்தில் யாராலும் பிடிக்க முடியாது. தற்போது ரோகித் இல்லாததால் நான் ஜடேஜாவுடன் அந்த இடத்தை பிடித்து நேரத்தை செலவழித்து வருகிறேன். இங்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக தான் இருக்கிறது. வெப்பமான சூழல் நிலவும் போது பந்து நன்றாக ஆடுகளத்தில் திரும்புகிறது. ஆனால் நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நாங்கள் நிறைய டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு தற்போது இங்கு வந்திருக்கிறோம்.

கடந்த 4,5 நாட்களாக அதிக அளவு பந்துகளை பயிற்சியில் வீசி வருகிறோம். சுப்மன் கில்லுக்கு ஒரு அணியை எப்படி வழி நடத்துவது என்று நன்றாக தெரியும். கடந்த 2 ஆண்டுகளாக பல சீனியர் வீரர்களுடன் அவர் பணியாற்றி இருக்கிறார். கடைசி ஒரு ஆண்டில் மட்டும் ரோகித் சர்மாவுடன் அவர் பல நிகழ்வுகளில் இணைந்து ஆலோசனை செய்ததை பார்த்திருக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஒரு கேப்டனாக பல விஷயங்களை கற்று இருக்கிறார்.

நான் பார்த்த வரையில் அவர் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார். அணியை உற்சாகமாக வைத்துக் கொள்வதில் கில் கடந்த சில ஆண்டுகளாகவே முக்கிய பங்காற்று வருகிறார். நான் கில்லை 4 ஆண்டுகளாக பார்த்து இருக்கிறேன். கோஹ்லி, ரோகித் சர்மா போன்ற கேப்டனிடம் இருக்கும் அதே தகுதி கில்லிடம் இருக்கிறது. எனவே அணியை வழிநடத்துவதற்கு கில் தயாராகி விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரோகித் சிறந்த ஆளுமை கொண்டவர்;

கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது: “ரோகித் சர்மா அணியை வைத்திருக்கும் சூழல் அற்புதமானது. அவர் திட்டினாலும் நீங்கள் அதை மனதில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஏனென்றால் அவர் தனது இதயத்தில் இருந்து திட்ட மாட்டார். விளையாட்டு அடிப்படையில் தான் திட்டுவார் அது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் சிறந்த ஆளுமை கொண்டவர். மேலும் அணியில் சிறந்த சூழலை வைத்திருப்பார். நான் விராட்கோஹ்லியின் தலைமையின் கீழ் ஆடியபோது டெஸ்ட் களத்தில் அல்லது அவருடைய யோசனைகளில் அவர் காட்டிய முன்முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒரு திட்டத்தைக் கொடுத்து அது வேலை செய்யாமல் போனால் அதற்கு மாற்று திட்டத்தை தயாராக வைத்திருப்பார். உடனடியாக அதை பந்துவீச்சாளர்களுக்கு அவர் தெரிவிப்பார்” என்றார்.

3-2 என இங்கிலாந்து தொடரை வெல்லும்;

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவு குறித்து தென்ஆப்ரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கணித்துள்ளார். அவர் கூறுகையில், 5 டெஸ்ட் போட்டியிலும் முடிவு இருக்கும். எந்த அணிக்கும் ரன்-அவே வெற்றி கிடைக்காது, 5 போட்டிகளும் மிக நெருக்கமாக இருக்கும். இங்கிலாந்துக்கு 3-2 என்ற கணக்கில் சாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

பிட்ஸ்.. பிட்ஸ்...

> இங்கிலாந்தின் பெக்கன்ஹாம் மைதானத்தில் இந்தியா-இந்தியா ஏ அணிகள்இடையே பயிற்சி போட்டி முடிந்த நிலையில் இந்திய வீரர்கள் இன்று ஒருநாள்ஓய்வுக்கு பின்னர் நாளை லண்டன் லீட்ஸ்சுக்கு புறப்படுகின்றனர். 18 மற்றும் 19ம்தேதி அங்கு பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

> பயிற்சியாளர் கவுதம் கம்பீர் , தனது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக இந்தியா திரும்பினார். தற்போது அவரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் முதல் டெஸ்ட்டிற்கு முன் அணியுடன் இணைவார்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

> இந்திய ஏ அணி வீரர்கள் நாளை நாடு திரும்பும் நிலையில், ஹர்ஷித் ரானா சீனியர் அணியுடன் தொடர்ந்து இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட அணியில் இவர் இடம்பெறாத நிலையில், தற்போது அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.