4வது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: இங்கி. மாஜி சுழல் மான்டிபனேசர் சொல்கிறார்
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக அழைக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப்பிற்கு பதிலாக, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது. இந்நிலையில், நான்காவது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங்கை கண்டிப்பாக களமிறக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ``அர்ஷ்தீப் சிங் இந்த தொடரில் விளையாட வேண்டும். தொடரின் முதல் டெஸ்டில் அவர் விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர், அவர் இந்திய அணிக்கு ஒரு நல்ல தேர்வாக இருந்திருப்பார். இந்த இங்கிலாந்து சூழல்களில் அவர் சிறப்பாக செயல்படுவார். மேலும், அடுத்து நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குடன், ஜஸ்பிரித் பும்ராவையும் பிளேயிங் லெவனில் பார்க்க விரும்புகிறேன்.
ஏனெனில் அடுத்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான `வாழ்வா சாவா’ ஆட்டம், இதில் ஜஸ்பிரித் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும். மான்செஸ்டர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், அங்கு வேகமும், பவுன்சும் இருக்கும்” என்றார்.