தென்காசி: தென்காசி அருகே சிவநல்லூரில் கதண்டு கடித்து கணவன் சண்முகம்பிள்ளை, மனைவி மகராசி உயிரிழந்துள்ளனர். தென்காசி அருகே சிவநல்லூர் என்ற கிராமம் உள்ளது. தென்காசியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் நேற்று ஐயப்பன் கோவிலில் விஷேஷ நிகழ்ச்சிக்காக அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அவ்வூரை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் வழிபட்டு அன்னதானத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தில் கூடுகட்டி இருந்த விஷ வண்டுகள்(குளவி ) கடந்தை எனப்படும். இவ்வகையான வண்டுகள் கூட்டமாக வந்த பக்தர்களை தாக்கியதில் 5 பேர் பாதிக்கப்பட்டனர்.
நேற்று இரவு அவர்களுக்கு பாதிப்பு அதிகரித்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சண்முகம்பிள்ளை அவரது மனைவி மகராசி ஆகியோர் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம், சாந்தி மற்றும் சண்முக பாரதி ஆகிய மூவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சண்முக பாரதி உடல் கவலைக்கிடமாக இருப்பதால் அவரை மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க உள்ளனர். இன்று காலை தீயணைப்பு படையினர் தென்னை மரத்தில் தண்ணீர் பாய்ச்சி அதை அழித்தனர். மேலும் அடுத்தடுத்து கணவன், மனைவி இறந்தது அப்பகுதியில் பெருந் சோகத்தை ஏற்படுத்தியது.