மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு: பக்தர்கள் வரவேற்பு
மதுரை: கடந்த 4 ஆண்டுகளில் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சிறு கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது என இந்து அறநிலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. கோயில் கமிஷனர் தலைமையில் இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இக்கோயில்களில் ஆண்டு தோறும் திருவிழாகள் நடந்து வரும் நிலையில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதனால், கோயிலுக்கும் பல கோடி ரூபாய் உண்டியல் மற்றும் நன்கொடை மூலம் வருமானம் வருகிறது. கோயில் வருமானத்தை வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகளை கையாண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பழநி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கோயில்களில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதும், 12 வருடத்திற்கு ஒரு முறை திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதும் மரபு. ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த மரபு முறையாக பின்பற்றப்படாமல் போனது. பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்பதுடன், சிறிய அளிவலான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தன.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களை ஆய்வு செய்து, உடனடியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டிய கோயில்களை தேர்வு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயில்களுக்கு முதற்கட்டமாக ரூ.1 கோடி வரை ஒதுக்கீடு செய்து, பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதனால் 2023-2024ம் ஆண்டில் மாநிலத்தில் 450க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டில் 1000க்கும் அதிகமான கோயில்கள் ரூ.500 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய கோயிலான திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதேபோல் உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களிலும் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறின. இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு பிப்.2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் பாதிக்கப்பட்டது. இதனை ஆகமவிதிப்படி பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு உத்தரவின்படி பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இந்து அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பெரிய, சிறிய அளவிலான கோயில்கள் என 500க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கோயில்களில் அறங்காவலர்கள் குழு நியமிக்கப்பட்ட பிறகு, அவர்கள் தரப்பில் தங்கள் பொறுப்பில் இருக்கும் கோயில்களை ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வருடத்தில் மேலும் பல கோயில்களில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்து அறநிலைத்துறை அமைச்சரின் நேரடி பார்வையில் பல கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இருக்கும் இடங்களில் மீண்டும் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கிராம கோயில்களிலும் வரும் நிதியாண்டில் குடமுழுக்கு நடத்த வாய்ப்புள்ளது. மேலும் பல கோயில்களில் தனியார் அமைப்பினர் நன்கொடை உதவியுடன், குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.