Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோயில் காவலாளி மரணம் சட்டவிரோத லாக்கப் டெத்: விசாரணை அறிக்கையை நீதிபதி தாக்கல்; ஆக.20க்குள் குற்றப்பத்திரிகை; சிபிஐக்கு ஐகோர்ட் கிளை கெடு

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை, மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி ஜூலை 8ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது நீதி விசாரணையை கடந்த 2ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை 4 நாட்கள் நடத்தினார். இந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல், அஜித்குமார் வழக்கின் தற்போதைய நிலை குறித்த டிஜிபி தரப்பு அறிக்கையை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர், ‘‘வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றி கெஜட்டில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவரது தாயாருக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். மனுதாரர்கள் தரப்பில், ‘‘இந்த வழக்கில் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. நவீன்குமார் படிப்பிற்கு ஏற்ற வேலை வழங்கவில்லை. அஜித்குமார் மட்டுமின்றி மேலும் 3 பேர் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர்.

அஜித்குமார் கொலை வழக்கு மட்டுமே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. பேராசிரியை நிகிதா அளித்த புகாரின்பேரில் அஜித்குமார் மீது நகை திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும். அனைத்து சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சாத்தான்குளம், ஸ்டெர்லைட் வழக்குகளின் விசாரணை நீண்டகாலமாக நடந்து வருகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணையையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘அறிவியல்பூர்வமாக விசாரணை நடந்துள்ளது. நேரில் பார்த்த சாட்சியத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அனைத்து தடயங்களையும் சேகரித்துள்ளார். நீதிபதி அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, அஜித்குமாரின் மரணம் சட்டவிரோத லாக்கப் டெத் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, சிபிஐ விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதி கிட்டத்தட்ட 50 சதவீத விசாரணையை முடித்துள்ளார். மற்றவை சிபிஐ விசாரணையில் தெரிய வரும்’’ என்றனர்.

மேலும் நீதிபதிகள், ‘‘கடந்த 1ம் தேதி மாவட்ட நீதிபதியின் முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர், விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதை கவனமாக பரிசீலித்து பார்த்தோம். சம்பவம் நடந்தது, போலீசாரின் பங்கு, சட்டவிதிகள் உள்ளிட்டவை குறித்து கூறப்பட்டுள்ளது. அஜித்குமாரின் சகோதரருக்கு மூத்த தொழிற்சாலை உதவியாளராக காரைக்குடி ஆவினில் வேலை வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதி) நீதிபதி அறிக்கை, ஆவணங்கள், தடயங்கள் உள்ளி்ட்ட ஆவணங்களை விசாரணை அதிகாரியான சிபிஐயிடம் வழங்க வேண்டும். சிபிஐ இயக்குநர், விசாரணை அதிகாரி மற்றும் குழுவை ஒரு வாரத்திற்குள் நியமிக்க வேண்டும். விசாரணை அதிகாரி தரப்பில் நீதிபதியின் அறிக்கை, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவாளரிடம் இருந்து பெறவேண்டும். சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையையும் வழங்க வேண்டும். பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு வழக்கையும், சிபிஐ விசாரிக்க வேண்டும். ஒரு வாரத்தில் விசாரணையை துவங்கி, சிபிஐ விசாரணை இறுதி அறிக்கையை (குற்றப்பத்திரிகை) விசாரணை நீதிமன்றத்தில் ஆக. 20ல் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழக டிஜிபி, இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். தென்மண்டல ஐஜி, மதுரை மற்றும் சிவகங்கை கலெக்டர்கள், எஸ்பிக்கள் தேவையான அனைத்து உதவிகளையும் சிபிஐ விசாரணைக்கு வழங்க வேண்டும். வழக்கின் அனைத்து சாட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு வழங்குவது குறித்து, தமிழ்நாடு அரசு முடிவெடுக்க அவகாசம் அளிக்கப்படுகிறது’’ எனக் கூறி 22ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* இலவச வீட்டுமனை இடத்தை டிஆர்ஓ ஆய்வு

அஜித்குமார் தாயார் மாலதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஏனாதி ஊராட்சி தேளியில் 3 சென்ட் நிலம், சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஐகோர்ட் கிளையில் நேற்று அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக வந்த அவரது தம்பி நவீன்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்ட அரசு வேலை, மடப்புரத்தில் இருந்து 80 கிமீ தூரம் சென்று பார்க்கும் வகையில் உள்ளது. வீட்டுமனை பட்டா திருப்புவனம் பகுதியில் இருந்து வெகு தொலைவில் காட்டுப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாத இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை’ என்றார். இந்நிலையில், வீட்டுமனை இடம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, தாசில்தார் விஜயகுமாருடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வீட்டு மனையின் தற்போதைய மதிப்பு, அமைவிடம் குறித்த விபரங்களை ஆய்வு செய்தார்.

* பணிக்கு வந்த மறுநாளே நிகிதா 20 நாள் மருத்துவ லீவு

மடப்புரம் கோயில் காவலாளியான அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா, திண்டுக்கல் எம்விஎம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 நாட்களாக விடுமுறையில் சென்ற நிகிதா விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் (ஜூலை 7) காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இந்நிலையில் நிகிதா நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் ஜூலை 28ம் தேதி பணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

* அஜித்குமாரின் நண்பர் ஆஸ்பத்திரியில் அனுமதி

அஜித்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்தபோது, அவரது நண்பரும், ஆட்டோ டிரைவருமான மடப்புரத்தை சேர்ந்த அருண்குமார் (33) என்பவரிடமும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, போலீசார் தாக்கியதால் அருண்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘`அருண்குமாருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.

* ‘மனிதாபிமான முறையில் நடந்து கொண்ட முதல்வர்’

அஜித்குமார் குடும்பத்தினரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்து ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மாநில காவல்துறை விசாரித்தாலும் அதிலும் குற்றம் சொல்வீர்கள். ஒன்றிய அரசின் சிபிஐயிடம் ஒப்படைத்தது சரியான முடிவாகும். தமிழக முதல்வர் மனிதாபிமான முறையில் நடந்து கொண்டார்’’ என்றார். இதேபோல், அஜித்குமாரின் தாயார் மாலதிக்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ஒட்டுமொத்த போலீசாருக்கும் புதிய ஆபரேட்டிங் முறை, புதிய கலாச்சாரம், புதுவிதமாக உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். உளவியல் பயிற்சி, மனநல ஆலோசனை, சட்ட பயிற்சிகளை டிஜிபியிலிருந்து கடைநிலையிலுள்ள காவலர் வரை மறு பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.