தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சியில் செம்மறி ஆடு விநியோகத்தில் ரூ.1,000 கோடி ஊழல்: அமலாக்க துறை அறிக்கை
திருமலை: தெலங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சியின்போது செம்மறி ஆடு விநியோக திட்டத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் ரேவந்த்ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சந்திரசேகராவ் அரசின்போது கால்நடை துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய கல்யாண்குமார், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்திற்கு சென்று பதிவுகளை அழித்து, சில கோப்புகளை எரித்து, பீரோவின் பூட்டுகளை உடைத்து ஆதாரங்களை அழித்ததாக ஊழல் தடுப்பி பிரிவுக்கு புகார்கள் வந்தது. மேலும், செம்மறி ஆடு திட்டத்தில் பயனாளிகளுக்கு பணம் சென்று சேராமல் ரூ.2.1 கோடி அரசு பணம், தனிநபர்கள், வியாபாரிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புப்பிரிவு (ஏசிபி) வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இதையடுத்து கால்நடை துறை அமைச்சராக பணியாற்றிய தலசானி னிவாஸ் யாதவ், அவரது சிறப்பு அதிகாரி கல்யாண் குமார் மற்றும் சில தனியார் தனிநபர்கள், வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள் என 8 வீடுகளில் அப்போது சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையின் உதவி இயக்குநர்களும் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து, ஏசிபி விசாரணையை தீவிரப்படுத்தியது. இதற்கிடையே மார்ச் 2021ல் சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் செம்மறி ஆடு விநியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக அமலாக்க துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆடு விநியோக திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அளித்த அறிக்கையின் அடிப்படையில் கரீம்நகர், மகபூப்நகர், நல்கொண்டா, நிஜாமாபாத், வாரங்கல், அடிலாபாத் மற்றும் சங்கரெட்டி ஆகிய 7 மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் செம்மறி ஆடு விநியோக திட்டத்தில் நடந்த முறைகேடு காரணமாக அரசுக்கு சுமார் ரூ.254 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் போலி வியாபாரிகளுக்கு ஏராளமான அரசு நிதி சென்றுள்ளது. அதன்படி மொத்தம் 32 மாவட்டங்களில் 1000 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என தெரிகிறது.
குறிப்பாக ஆடுகளை உண்மையில் வாங்கி பயனாளிகளுக்கு தராமல், ஆடுமேய்க்காத தனிநபர்களுக்கு அரசு பணம் சென்றுள்ளது. இதுதொடர்பாக ஐதராபாத்தில் நடத்திய சோதனைகளில் 200 போலி வங்கிக்கணக்கு புத்தகங்கள், வெற்று காசோலைகள், டெபிட் கார்டுகள், 31 மொபைல் போன்கள், 20க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.