ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.7.2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான "திறன்" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை துணை முதலமைச்சர் வெளியிட்டார்.
மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள TNSPARK (Tamil Nadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற புதிய பாடத்திட்ட பாடநூல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை, உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய காலை வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 457 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
பெருமையடைகின்றன். அதோடு சேர்த்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 'திறன்' மற்றும் TN Spark ஆகிய இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளையும் இங்கே தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக இந்த 3 நாட்களில் மட்டும் நடைபெறுகின்ற 2 நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். நேற்று முன்தினம் இதே அரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஒரு நிகழ்ச்சி, ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் 2 நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடந்தது. இன்றைக்கு ஆசிரியர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் நம்முடைய பள்ளிக் கல்வித்துறையினுடைய அமைச்சர் அவர்கள்.
எனக்கு எப்பவுமே ஆசிரியர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பதற்றம் வந்துவிடும். ஒன்றிரண்டு ஆசிரியர்களை பார்த்தாலே பதற்றம் வந்து விடும். இன்றைக்கு இத்தனை ஆசிரியர்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள். எனவே உங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் பள்ளியிலும் சரி. கல்லூரியிலும் சரி நான் ஒரு அவுட்ஸ்டாண்டிங் மாணவன் தான். அவுட்ஸ்டாண்டிங் மாணவன் என்றால் என்னவென்று சொல்கிறேன் என்று உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று நான் நம்புகின்றேன். இருந்தாலும், உங்களை எல்லாம் இன்றைக்கு ஒரே இடத்தில் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது.
பொதுவாகவே திராவிட இயக்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மீதுதந்தை பெரியார் அவர்கள். பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெரும் மதிப்பும், மரியாதையும் அவர்கள். பேரறிஞர் வைத்து இருந்தார்கள். இன்றைக்கு குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், மகிழ்ச்சியான விசயம் இன்றைக்கு நிறைய மகளிர் ஆசிரியர்களாக இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள்.
கிட்டத்தட்ட 100 வருடத்திற்கு முன்பு. 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெண்களை அதிகளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, தொடக்கப்பள்ளிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வாய்ப்பை வழங்கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் இன்றைக்கு நம்முடைய தலைவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் மீது அன்போடு இருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு 'அகரம்' சொல்லிக் கொடுத்து, அவர்கள் படிக்கப் போகின்ற Robotics, Al போன்ற பெரிய. பெரிய படிப்புக்கெல்லாம் அடித்தளம் இடுவது தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள் தான். உங்களிடமிருந்து தான் கல்வியை மட்டுமின்றி இன்றைக்கு உலகையும் மாணவச் செல்வங்கள் கற்றுக் கொள்ள இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஆரம்பக் கல்வியை வழங்கும் பணியை தொடங்கவுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். திராவிட மாடல் அரசு அமைந்த நாள் முதல், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தீட்டுகின்ற ஒவ்வொரு திட்டமும், வரலாற்றுச் சாதனையாக உயர்ந்து நிற்கின்றது.
அந்த வகையில், இன்றைய தினம் இங்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியும் வரலாற்றில் நிச்சயம் இடம்பெறப் போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை. நீங்கள் இன்றைக்கு பணி ஆணையை பெறுவதால் மட்டும் நான் இதை சொல்லவில்லை. பள்ளிகல்வித்துறை வரலாற்றிலே முதன்முறையாக மலைப்பகுதிகளில் காலிப்பணியிடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, 100க்கு 100 சதவீதம், இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தி வரலாற்றுச் சாதனை படைத்து இருக்கிறது நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு. இதன் மூலம் திராவிட மாடல் அரசு என்றால் சமூக நீதிக்கான அரசு என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் பலமுறை பெருமையாக கூறி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம் எதுவென்று கேட்டீர்கள் என்றால், அது நம்முடைய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியினுடைய பணிக்காலம் தான் என்று பாராட்டியிருக்கிறார்கள். அதனை இன்றைக்கு மீண்டும் பொன் எழுத்துக்களால் பொறித்து நிரூபித்து காட்டியிருக்கிறார் நம்முடைய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி . தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு காரணமும் வந்திருக்கக்கூடிய ஆசிரியர்கள் நீங்கள் தான். இதனை நான் சும்மா சொல்லவில்லை. ஒன்றிய அரசினுடைய புள்ளிவிவரங்கள் இதை சொல்கின்றன.
அத்தகைய சிறப்புமிக்க கல்வித்துறையில் பணியேற்கக்கூடிய உங்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஊர்கூடி இழுக்க வேண்டிய அந்த கல்வி எனும் தேருக்கு தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள்தான் அச்சாணி. இதை உணர்ந்த காரணத்தினால் தான் நம்முடைய கலைஞர் அவர்கள் உங்களின் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை தந்தார்கள். கலைஞர் அவர்களுடைய பேனா தான் ஒன்றிய அரசுக்கு இணையான ஒரு ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெற்றுக் கொடுத்தது. ஒரே கையெழுத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் யார் என்று நான் சொல்ல தேவையில்லை அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் யார் என்று நான் சொல்ல தேவையில்லை. உங்களுக்கே தெரியும். ஆனால், ஒரே கையெழுத்தின் மூலம். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்த ஒரே தலைவர் கலைஞகள்.
ஆகவே. கலைஞர் வழியிலே செயல்பட்டு வருகின்ற நம்முடைய முதலமைச்சரும், அரசு பணியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு என்னென்ன வேண்டும் என்பதை உரிய நேரத்தில் உங்களுடைய தேவையை அறிந்து அந்த திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கும். ஆசிரியர்களுக்கும் இன்றைக்கு இவ்வளவுத் திட்டங்களை வழங்குகிறோம் என்றால், இதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செலவாக பார்க்கவில்லை. அவற்றை எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீதான முதலீடாகத்தான் நம்முடைய முதலமைச்சர் பார்க்கின்றார்கள்அதனால் தான், ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வழங்காமல் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்ற போதிலும், நம்முடைய முதலமைச்சர், ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து உங்களுடைய பணிகளை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்
குறிப்பாக, விளையாட்டுத் துறை அமைச்சராக உங்களுக்கு ஒரு வேண்டுகோள், பிள்ளைகளை படிக்கச் சொல்லும் அதே வேளையில் விளையாடவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். உங்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும் என்று வாழ்த்தி, இந்த வாய்ப்பை அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும். உங்களுடைய துறை அதிகாரிகளுக்கும், வந்திருக்கக்கூடிய ஆசிரியர் பெருமக்கள் உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம். என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா. சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பரந்தாமன். அ.வெற்றி அழகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்
டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் பொது நூலகத் துறை இயக்குநர் எஸ்.ஜெயந்தி.இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மருத்துவர் மா.ஆர்த்தி.இ.ஆ.ப., மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் பி.வி.பி. முத்துக்குமார். பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன். தனியார் பள்ளிகள் இயக்கக இயக்குநர் முனைவர் பெ. குப்புசாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ. நரேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் முனைவர் மு.பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.