விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசு பள்ளியில் திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பள்ளி வளாகத்தில் சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு போதையில் வந்த மாணவர்களை தலைமையாசிரியரிடம் அழைத்து செல்ல முயன்ற முதுகலை ஆசிரியர் சண்முகசுந்தரத்தை போதை மாணவர்கள் மதுபாட்டிலால் கடுமையாக தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயத்துடன் நிலை தடுமாறி விழுந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் மது போதையில் ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய இருவரையும் பிடித்து வகுப்பறையில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் ஆசிரியர் சண்முகசுந்தரம் செய்முறை தேர்வு மதிப்பெண்களை வேண்டுமென்றே குறைத்தார்.
இதனால் மன உளைச்சலில் ஆசிரியர் சுந்தரமூர்த்தியை தாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். அதனால் இன்று இருவரும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தோம் என முதல் கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து 2 மாணவர்களையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.
தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணி பாதுகாப்பு கோரி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பிலான ஆர்ப்பாட்டம் முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது.
2வது முறையாக ஆசிரியர் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக்க தெரிவித்தனர். அதே பள்ளியில் போலீசாரை நியமித்து பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். உடனடியாக ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.