Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

சென்னை: நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் அப்போது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

தற்போது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 65 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இவற்றில் 32 சுங்கச்சாவடிகள் ஏற்கனவே காலாவதி ஆகிவிட்டன. அதனை அகற்றக்கோரி தமிழ்நாடு அரசு பலமுறை ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியது. ஆனால் ஒன்றிய அரசு வழக்கம்போல் செவிமடுக்காமல் அதனை நிராகரித்து வருகிறது.

அந்தவகையில், சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கல்லகம் - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி, திருச்சி - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், திருவண்ணாமலை இனாம்காரியந்தல், விழுப்புரம் தென்னமாதேவி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள், லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.