Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதி விடுவிப்பு

சென்னை : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் “பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்” என்பதைக் கருத்தில் கொண்டு, பெண்கள் பொருளாதாரத்தில் சுயசார்பு பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக் குழு இயக்கம் உதயமாகி, இன்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி உயர்ந்து நிற்கிறது. இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இந்த சுய உதவிக்குழு இயக்கத்தின் வெற்றியானது பிற மாநிலங்களையும் ஈர்த்து, அங்கும் சுய உதவிக் குழுக்கள் அமைய வழி வகுத்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசில், ஊரக மற்றும் நகர்ப்புர மகளிரின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய, அவர்கள் பொருளாதார சுய சார்பு பெற, மகளிரை குழுக்களாக இணைத்து, அவர்களுக்கு சுழல் நிதி வழங்கி, வங்கிக் கடன் இணைப்பு பெற்றுத் தந்து, பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்திட தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் 1,32,689 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு அமைக்கப்படும் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வாழ்வாதார நிதி போன்றவை வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் பழங்குடியினர், நலிவுற்றறோர், திருநங்கையர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையரைக் கொண்ட 23 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 23 இலட்சம் ரூபாய், 227 முதியோர் சுய உதவிக் குழுக்களுக்கு 2.27 கோடி ரூபாய் மற்றும் 95 மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுக்களுக்கு 95 இலட்சம் ரூபாய் என மொத்தம் 345 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக 3 கோடியே 45 இலட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக வழங்கப்படும் வாழ்வாதார நிதியினை முறையாகப் பயன்படுத்தி, சிறப்பாக செயல்பட வேண்டுகிறோம். "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.