Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 11 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்; உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்று தர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆவடி கமிஷனர் சங்கர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, சொத்து தொடர்பான குற்றங்கள், கொலை - கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது, குடும்ப வன்முறை, பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வண்ணம் குற்றவாளிகள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் குற்றச்சம்பங்களை தடுத்து அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.