Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2, 2ஏ-645 பணியிடங்களுக்கு செப்.28ல் தேர்வு: அடுத்த மாதம் 13ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

அதன்படி குரூப் 2 பணியில் உதவி ஆய்வாளர் 6 இடங்கள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி அல்லாதவர்)-1, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளிகள்) 1, நன்னடத்தை அலுவலர்-5, சார் பதிவாளர் (கிரேடு 2)- 6, சென்னை மாநகர காவல் துறையில் தனி பிரிவு உதவியாளர் 3, குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு உதவியாளர் 5, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உதவி பிரிவு அலுவலர் 1, வனவர் 22 இடங்கள் என மொத்தம் 50 இடங்கள் நிரப்பப்படுகிறது.

குரூப் 2ஏ பதவியில் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டு துறை முதுநிலை ஆய்வாளர் 65 இடம், இந்து சமய அறநிலையத்துறையில் தணிக்கை ஆய்வாளர் 11, வணிக வரித்துறையில் உதவியாளர் 13, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் 40, உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் உதவியாளர் 12, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையில் உதவியாளர் 43, காவல் துறையில் உதவியாளர் 41, மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் துறையில் உதவியாளர் 74, தொழிலாளர் துறை உதவியாளர் 33, பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளர் 109 என 31 துறையில் 595 இடங்கள் நிரப்பப்படுகிறது.

குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளில் மொத்தம் 645 இடங்கள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முற்பகல் 12.01 மணி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது ஒரு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும். முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். முதல்நிலை தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்கள் (பட்டப்படிப்பு தரம்), பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 வினாக்கள் (10ம் வகுப்பு தரம்) என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். இத்தேர்வில் 90 மதிப்பெண் குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் பெற வேண்டும். கொள்குறி வகையில் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் முழு விவரங்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.in பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 தேர்வு (குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ) பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கு அடுத்த மாதம் 13ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை யுபிஐ மூலமாக செலுத்தலாம்.

தொடர்ச்சியாக 13வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு குரூப் 2ஏ பணிகளின் தேர்வுத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025) குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு குரூப் 2 தேர்வு மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். மேலும் அரசுத்துறை, நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் பணியிடங்கள் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கும் பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.