தமிழகத்துக்கு மற்றொரு பேராபத்து பழநியில் மாலிப்டினம் சுரங்க திட்டம்: விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கும்
* ஒன்றிய அரசுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு, திட்டத்தை கைவிடாவிட்டால் போராட முடிவு
பழநி: பழநி மலைப்பகுதிகளில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்தும், திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரியும் விவசாயிகள், பொதுமக்கள் போராட முடிவு செய்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு விரோதமான திட்டங்களாகவே உள்ளன. சமீபத்தில் மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சி அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் சத்தமின்றி மற்றொரு பேராபத்து தமிழ்நாட்டு மக்களை நோக்கி வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியில் உள்ள மலைகளில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை தூக்கமிழக்க செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 400 சதுர கிலோமீட்டர் (சுமார் 1 லட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் எனும் அரிய வகை தனிமம் இருப்பதாகவும், அதனை வெட்டி எடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மாலிப்டினம் தனிமம் எடுப்பதற்காக, பழநி வட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய நெய்க்காரப்பட்டி, கரடிகூட்டம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்கம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பழநி நகரில் உள்ள இடும்பன் மலை, ஐவர் மலை, இரவிமங்கலம் பகுதிகள் வருவதாக தெரிகிறது. பழநி நகரின் மையப்பகுதியில் இடும்பன் மலை உள்ளது. இங்குள்ள இடும்பன் கோயிலுக்கு கேரள பக்தர்கள் அதிகளவு வருகின்றனர்.
பாப்பம்பட்டி அருகே உள்ள ஐவர் மலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. பழநி-கொழுமம் சாலையில் பாப்பம்பட்டி கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஐவர் மலை. சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து உள்ளிட்ட பழங்கால இலக்கியங்களில் ‘ஐயிரை மலை’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரத இதிகாசம் நடந்த துவாபார காலத்தில், பஞ்சபாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்து காடுகளில் வாழ்ந்தபோது, திரவுபதியுடன் இந்த மலையில் தங்கியதால் இம்மலைக்கு ஐவர் மலை என பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இம்மலையில் சுமார் 1,200 வருடங்கள் பழமையான சமணர் சிலை உள்ளது. தற்போது இங்குள்ள சமண சிற்பங்கள் யாவும் சேதப்படுத்தப்படாமல் இருக்க தமிழ்நாடு தொல்லியல் துறையினர் ஐவர்மலையை பாதுகாத்து வருகின்றனர். பழநி அருகே உள்ள இரவிமங்கலம் பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த 3 இரும்பு உருக்காலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரும்பு அச்சு உலைகள், இரும்பை உருக்கத் தேவையான சுண்ணாம்புக் கட்டிகள் இன்றளவும் அந்த இடத்தில் காணப்படுகின்றன.
இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள், எலும்புகள், கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் வெளிப்படுகின்றன. தற்போது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இந்த சின்னங்கள் அருகில் காணப்படுகின்றன. 100 ஏக்கர் பரப்பளவில் நெருக்கமாகவும், மீதமுள்ள 100 ஏக்கர் பரப்பளவில் பரவலாகவும் இச்சின்னங்கள் காணப்படுகின்றன. தவிர, இப்பகுதிகள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை.
மாலிப்டினம் சுரங்கம் அமைக்கப்பட்டால் சாதாரண கல்குவாரி மற்றும் கிரானைட் குவாரிகள் போல் அல்லாமல், தங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சூழல் உருவாகும். சுற்றுச்சூழல் பாதிக்கும் என இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பல்வேறு விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசு இத்திட்டத்தை கைவிட மறுத்தால் போராட தயாராக உள்ளதாகவும் விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவினர் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கனிமவளத்துறை மற்றும் மாநில கனிம வளங்கள்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். சமூக வலைதளங்களிலும் தற்போது இத்திட்டத்தின் ஆபத்துகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
* 42வது இடம்
பூமியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் பட்டியலில் மாலிப்டினம் 54வது இடத்தைப் பிடிக்கிறது. அதே போல கடலில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் பட்டியலில் 25வது இடத்தையும் பிடிக்கிறது. ஆக ஒட்டுமொத்தமாக சராசரியாக பில்லியனுக்கு 10 பகுதிகள் என்ற அளவில் பூமியில் மாலிப்டினம் கிடைக்கிறது. பிரபஞ்சத்தில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் என்ற வரிசையில் வகைப்படுத்தினால் மாலிப்டினத்திற்கு 42வது இடமாகும்.
* தமிழக நிலங்களை அழிக்க பாஜ சதி
பழநியை சேர்ந்த ஸ்ரீதர் கூறுகையில், ‘‘தமிழக அரசு பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்த விவசாய நிலங்கள் அதிகமுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் வெட்டி எடுக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்தே அனுமதி ரத்து செய்யப்பட்டது. தற்போது மற்றொரு பசுமை பரப்பான பழநியில் சுரங்கம் எடுக்க அனுமதித்தது பெரும் தவறு. நியூட்ரினோ, மீத்தேன் வாயு என தமிழக விவசாய நிலப்பரப்பை அழிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சிக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது’’ என்றார்.
* கொடைக்கானலுக்கு ஆபத்து
திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறியதாவது: மாலிப்டினம் சுரங்கம் அமைக்கப்பட்டால் திண்டுக்கல் மேற்கு பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தின் மேல் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்படும். கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கும். தவிர, பூகோளரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தும்.
மக்களின் வாழ்நிலை வெகுவாக பாதிக்கும். மேலும், இதிகாச காலத்துடன் தொடர்புடைய ஐவர்மலை, ரவிமங்கலம், பழநிமலை ஆகியவை பாதிபிற்குள்ளாவதால் ஆன்மீக உலகளவில் பக்தர்களிடையே பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ஒன்றிய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், மக்களின் விவசாயம் மற்றும் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளையும், அங்குள்ள பல்லுயிர்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு கூறினார்.
* திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறுகையில், ‘‘மக்கள் விரும்பாத, மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ஒன்றிய அரசின் எந்த திட்டத்தையும் தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் தமிழ்நாடு முதல்வர் உறுதியோடு உள்ளார். மதுரை அரிட்டாப்பட்டியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்களின் கருத்துக்களுடன் தமிழ்நாடு அரசு உறுதியாக நின்று அத்திட்டத்தை வரவிடாமல் செய்தது. அதேபோல் பழநி பகுதியில் மாலிப்டினம் சுரங்கமும் வராது என்பதை உறுதியாக சொல்கிறேன்’’ என்றார்.
* பிளாட்டினத்துக்கு மாற்று
* தோல் மற்றும் ரப்பர் பொருட்களுக்கு நிறமேற்ற பயன்படுகிறது.
* அமோனியம் எனும் சேர்மத்தை தயாரிக்க பயன்படுகிறது.
* மாலிப்டினம் தூள் சில தாவரங்களுக்கு உரமாக பயன்படுகிறது.
* மார்பக புற்றுநோய் தொடர்பான எக்ஸ்ரே பயன்பாடுகளில் இதை பயன்படுத்துகிறார்கள்.
* இயந்திர பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
* மின் உலைகளில் பிளாட்டினத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
* 2.50 லட்சம் டன் உற்பத்தி
மாலிப்டினைட் என்ற தாதுவிலிருந்து மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. 2011ல் உலக மாலிப்டினம் உற்பத்தி 2 லட்சத்து 50 ஆயிரம் டன். இதில் சீனா (94 ஆயிரம் டன்), அமெரிக்கா (64 ஆயிரம் டன்), சிலி (38 ஆயிரம் டன்), பெரு (18 ஆயிரம் டன்) மெக்சிகோ (12 ஆயிரம் டன்) ஆகியவை மாலிப்டினத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.
10 மில்லியன் டன் மாலிப்டினம் உலகில் இருப்பு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்விருப்பு சீனா (4.3 மில்லியன் டன்), அமெரிக்கா (2.7 மில்லியன் டன்), சிலி (1.2 மில்லியன் டன்) போன்ற நாடுகளில் காணப்படுகிறது. 93 சதவீத மாலிப்டினம் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி மாலிப்டினத்தை ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்கள் தயாரிக்கின்றன.
* மாலிப்டினம் என்றால் என்ன?
மாலிப்டினம் என்பது ‘விளி’ என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இதன் அணு எண் 42. மாலிப்டினத்தின் அணுக்கருவில் 54 நியூட்ரான்கள் உள்ளன. பண்டைய கிரேக்க மொழியில் ஈயம் போன்றது என்ற பொருள் கொண்ட மாலிப்டாசு என்ற சொல்லிலிருந்து மாலிப்டினம் என்ற பெயர் தோன்றியது. மாலிப்டினத்தின் தாதுக்கள் நீண்ட நெடுங்காலமாக அறியப்பட்டாலும் மாலிப்டினம் 1778ம் ஆண்டு கார்ல் வில்லெம் சீலே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 1781ல் முதன்முதலாக பீட்டர் யாக்கோபு எயெல்ம் என்பவரால், தனிமமாகத் தனித்துப் பிரித்து எடுக்கப்பட்டது. மாலிப்டினம் தனித்த நிலையில் ஒருபோதும் இயற்கையில் கிடைப்பதில்லை. தூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகும். பொதுவாகத் தூள் நிலையில் இது கிடைக்கிறது. எளிதில் இதை தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். எக்கை விட மிருதுவானதாக காணப்படுகிறது. தூய நிலையில் உள்ளபோது இதை பளபளப்பாக மாற்றமுடியும்.
வலிமையான இந்த உலோகம் பாரா காந்தத்தன்மை கொண்டதாக உள்ளது. அனைத்து தனிமங்களிலும் இது ஆறாவது உயர்ந்த உருகுநிலையைக் கொண்ட தனிமமாக உள்ளது. மாலிப்டினம் உடனடியாக கடினமான மற்றும் நிலைப்புத் தன்மை கொண்ட கார்பைடுகளாக மாறி கலப்பு உலோகங்களை உருவாக்குகிறது, இந்த காரணத்திற்காக உலகில் உற்பத்தியாகும் பெரும்பாலான மாலிப்டினத்தின் சுமார் 80 சதவீதம் எககு உலோகக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
* நிலத்தடி நீர் குறையும்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் கூறுகையில், ‘‘பழநி பகுதி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. மாலிப்டினம் சுரங்கம் அமைத்தால், விவசாயம் கண்டிப்பாக பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறையும். பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும். இதனால்தான் திட்டத்தை ஆரம்ப கட்டத்திலேயே விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்’’ என்றார்.
* குடும்பத்துடன் போராடுவோம்
காவலப்பட்டி விவசாயி ஈஸ்வரன் கூறுகையில், ‘‘2 போகம் வரை நடந்த எங்கள் பகுதியில் தற்போதே விவசாயம் ஒரு போகம் மட்டுமே நடந்து வருகிறது. நெல், கரும்பு போன்ற நீண்ட கால பயிர்களை பயிரிட முடிவதில்லை. பெரும்பாலான விவசாயிகள் காய்கறி விவசாயத்திற்கு மாறிவிட்டனர்.
எஞ்சியவர்கள் தென்னை, மா போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் எங்களுக்கு, தற்போது பேரிடியாய் இந்த செய்தி அமைந்துள்ளது. இத்திட்டத்தைக் கொண்டு வர நினைத்தால் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும்’’ என்றார்.