தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்படுகிறது ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் நாளை தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை ஆகஸ்ட் 2ம் தேதி (நாளை)சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும். அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது.
மேலும், பொதுமருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன. இம்முகாமில் பங்குகொள்ளும் பயனாளர்களுக்குக் மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன. இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறுசிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இந்த முகாமை அனைத்து பொதுமக்கள்அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.