Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழில் வேத மந்திரங்கள் முழங்க திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழில் வேதமந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகு 15 ஆண்டுகளை கடந்து நேற்று காலை குடமுழுக்கு விழா மிகவும் சிறப்பாக நடந்தது. இதையொட்டி, கடந்த ஜூலை 1ம் தேதி மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு கோயில் உள்ளே பிரகாரங்களில் 4 இடங்களிலும், உற்சவரான சுவாமி சண்முகருக்கு ராஜகோபுரம் அருகே பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கியது.

ராஜகோபுர வாசல் யாகசாலையில் சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதருக்கு 5, நடராஜருக்கு 5, பெருமாளுக்கு 5 மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு, தொடர்ந்து 6 நாட்கள் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. குடமுழுக்கு தினமான நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, 12ம் கால யாகசாலை பூஜைகளில் கோயிலின் உள்ளே மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, மரபாணி, வாசனை தான்ய திருக்குட நீராட்டு நடந்தது.

ராஜகோபுர வாசல் யாக சாலையில் அதிகாலையில் சுவாமி சண்முகருக்கு 12ம் கால யாக பூஜைகளாக மகா நிறைஅவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.22 மணிக்கு கோயில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு தந்திரிகள் மற்றும் போத்திமார்களும், விநாயகர், சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை, ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமானுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாளுக்கு பட்டாச்சாரியார்களாலும் வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

குடமுழுக்கின் போது ஓதுவார்கள் தமிழில் வேதங்கள் ஓதினர். தொடர்ந்து கோயில் உள்ளே மூலவருக்கு எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், 4 வேதம் ஓதுதல் நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் உருகு சட்டை சேவை ஆகி சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி இரவு வள்ளி, தேவசேனா அம்மனுடன் தங்க சத்திரத்தில் சுவாமி சண்முகரும், விநாயகர், குமரவிடங்க பெருமான், ஜெயந்திநாதர், நடராஜர், நால்வர் சுவாமிகள் சப்பர வீதி உலா நடைபெற்றது.

முன்னதாக, நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் நேற்று மாலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். குடமுழுக்கினை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர். மொத்தத்தில் நேற்று கோயில் கடற்கரை, கோயில் வளாகங்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கில் கலந்து கொண்டு வழிபட்டனர். டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிருங்கேரி சாரதா பீடாதிபதி விதுசேகர சுவாமிகள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் மற்றும் சிறப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட பலர் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்.

* ஜப்பான் பக்தர்கள்

கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இருந்து பலர் பங்கேற்றனர். ஜப்பானைச் சேர்ந்த பாலகும்பா குருமணி தலைமையில் 25 பக்தர்கள் குழுவாக பங்கேற்று வழிபட்டனர். ஜப்பானில் முருகனை சரவணனாக வழிபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

* ரயிலில் இரு மடங்கு கட்டணம்

கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 7.10 மற்றும் 10.10 மணிக்கு இயக்கப்பட்ட நெல்லை பாசஞ்சர் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. அதைத் தொடர்ந்து காலை 11.20 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயிலைத் தொடர்ந்து பகல் 12.20 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து இயக்கப்படும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்கும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் திரண்டதால் ரயில் நிலைய ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் சிறப்பு ரயிலில் கட்டணம் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு ரூ.40 (சாதாரண கட்டணம் ரூ.20) என வசூலிக்கப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

* விஐபி பாஸ்கள்

திருச்செந்தூர் குடமுழுக்கினை காண பக்தர்களுக்கு கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்திருந்து குடமுழுக்கை பார்த்தனர். மற்றபடி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விஐபிகளுக்கு என தனி பாஸ் வழங்கப்பட்டது.