தையல்காரர் படுகொலை குறித்த படம் எடுத்த சினிமா இயக்குனருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: கொலை மிரட்டலால் ஒன்றிய அரசு உத்தரவு
புதுடெல்லி: தையல்காரர் படுகொலை குறித்த திரைப்படம் எடுத்த சினிமா இயக்குனருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததால், அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். பாஜக பிரமுகர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்ததற்காக அவர் கொல்லப்பட்டார்.
கன்னையா லால் படுகொலைக்குப் பிறகு, குற்றவாளிகள் தாங்களே பொறுப்பேற்று காணொளி ஒன்றையும் வெளியிட்டனர். நுபுர் சர்மாவுக்கு ஆதரவளித்ததற்காகவே இந்தக் கொலையை செய்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த கொடூர கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘உதய்பூர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் அமித் ஜானி உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பிலும் கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து, அவருக்கு ஒன்றிய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதன்படி, ஒன்றிய அரசின் ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎப்) சேர்ந்த 11 வீரர்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி பகுதிகளில் அமித் ஜானிக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.
தனக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் அவர் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். பல சட்டப் போராட்டங்கள் மற்றும் தணிக்கை வாரியத்தின் சுமார் 150 திருத்தங்களுக்குப் பிறகு, இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.