Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் சதுப்பு நிலம் அதிகம் உள்ள மாநிலமாக திகழும் தமிழகம்; இயற்கை சூழலுக்கு வழிவகுக்கிறது

பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் அமைந்துள்ளன. இதில், சதுப்பு நிலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த சதுப்பு நிலங்கள் பூமிக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. ஆண்டு முழுக்க சதுப்பு நிலங்களில் நீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, பூமியை காக்கும் இந்த சதுப்பு நிலங்களை அழியாமல் காப்பது நமது கடமை. ‘நமது பொதுவான எதிர்காலத்திற்காக சதுப்பு நிலங்களை பாதுகாத்தல்’ என்பதே 2025ம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளாகும். சதுப்பு நிலங்கள் பூமியில் வெப்பத்தை குளிர்வித்து பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் நீர் சேமிப்பிற்கும், வெள்ளத்தின்போது சேதங்களை தடுத்து, சுற்றுச்சூழலையும் காக்கிறது. சதுப்பு நிலங்களில் வாழும் உயிரினங்கள் பல்லுயிர் தன்மையை கொண்டுள்ளதால், இந்த நிலம் மனிதனின் நுரையீரல் போன்றது.

1971ல் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சார் நகரில், உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் ராம்சார் ஒப்பந்தம் கையெழுத்தானது. சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற இம்மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 2ம் தேதியை, உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்படுகிறது. 1997 முதல் சதுப்பு நிலங்கள் பற்றி மக்கள் விழிப்புணர்வுக்கென நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நமது உடலை எப்படி சுத்தப்படுத்த சிறுநீரகங்கள் மிக முக்கியமானதோ, அதேபோல் பூமியின் சிறுநீரகமாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. மேலும், பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய காரணியாக விளக்கும் சதுப்பு நிலங்கள், அரிய வகை பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாகவும் திகழ்கிறது.

உலக அளவில் சதுப்பு நிலங்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே இருந்தாலும், அனைத்து தாவர மற்றும் விலங்கு இனங்களில் 40 சதவீதம் சதுப்பு நிலங்களில் வாழ்வதே சதுப்பு நிலங்களுக்கான முக்கியத்துவத்திற்கு சான்றாகும். 1900 முதல் 64 சதவீதத்திற்கும் மேற்பட்ட சதுப்பு நிலங்கள் வடிகால் மற்றும் பிற நில பயன்பாட்டிற்கென மாற்றப்பட்டதில் இந்நிலங்களின் பரப்பளவை நாம் பெருமளவில் இழந்துள்ளோம். இதனால் நன்னீரை நம்பியிருக்கும் இயற்கை, பெரும் சரிவில் உள்ளது. சதுப்பு நிலங்கள் இழக்கப்படுவதால், மக்கள் தங்கள் நல்வாழ்வையும் இழக்கின்றனர். முந்தைய காலத்தில் மன்னர்கள் நீர்நிலைகளை வெட்டும் பணியை மேற்கொண்டதற்கு முக்கியக் காரணம், உயிர்களை வாழ வைக்கும் தண்ணீருக்காகத்தான். அந்த நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து இப்போதுதான் நாம் உணர்கிறோம்.

ஒரு குளமானது நிலத்தடி நீருக்காக மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. தற்போது இந்திய அரசு அறிவித்துள்ள சதுப்பு நிலங்களை பார்த்தால் அவற்றுள் பெரும்பாலானவை பறவைகள் சரணாலயங்களே. இவற்றை நோக்கி வெளிநாடுகளிலிருந்து பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றன. உலக உயிரின உற்பத்திக்கு நீர் என்பது மிகவும் அவசியம். அவற்றைப் பராமரித்துப் பாதுகாக்கும் பட்சத்தில் தான் உயிரினங்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ இயலும். பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டு ஏறக்குறைய நகரங்கள் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு பேரிடர்கள் நிகழ்வதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப் பெரிய அளவில் மழை, வெள்ளம், புயல் சேதங்கள் நிகழ்கின்றன.

இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணம், சதுப்பு நிலங்களை நாம் பாதுகாக்க தவறியதுதான். எனவே, சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர், பேராசிரியர் எம்.ராஜேஷ் கூறியதாவது: உலகெங்கிலும் 2,600க்கும் மேற்பட்ட ராம்சார் தளங்கள் எனும் சதுப்பு நிலங்கள், 2.5 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிக பரப்பளவைப் பாதுகாக்கின்றன. இதில், 171 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் 89 இடங்களில் சதுப்பு நிலங்கள் உள்ளன. அதிகளவு சதுப்பு நிலம் கொண்ட மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடமும், உத்தரப்பிரதேசம் 2வது இடமும் பெற்றுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் இரண்டிற்கும் தற்போது ராம்சார் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள் 20 இடங்களாக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. இந்த சதுப்பு நிலங்களில் கரி நிலம், ஆறுகள், ஏரிகள், டெல்டாக்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய காடுகள், நெல் வயல்கள், பவளப்பாறை பகுதிகள் வரை அடங்கும். துருவப் பகுதிகள் முதல் வெப்ப மண்டலங்கள் வரை, உயரமான பகுதிகள் முதல் வறண்ட பகுதிகள் வரை, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு காலநிலை மண்டலத்திலும் சதுப்பு நிலங்கள் உள்ளன. பூமியின் மேற்பரப்பில் நரம்பு மண்டலமாக, மனித வாழ்விற்கு இன்றியமையாததாக இந்த சதுப்பு நிலங்கள் விளங்குகிறது. இது நீராதாரமாக, சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.

மிகப்பெரிய இயற்கை கார்பன் கிடங்காக, விவசாயம், மீன்வளம் காப்பதாக இருக்கிறது. சதுப்பு நிலங்கள் பூமிக்கான செழிப்பை, தேவைக்கான சுத்தமான நீரை, உணவு பாதுகாப்பை வழங்குகிறது. பேரிடர்களில் இருந்தும் காக்கிறது. பூமியின் முதன்மையான கார்பன் சேமிப்பகங்களில் சதுப்பு நிலங்களும் அடங்கும். அழகான இயற்கை சூழலுக்கும் வழிவகுக்கிறது.இவ்வாறு தெரிவித்தார்.

வகைகள்

சதுப்பு நிலங்கள் பல சிறப்பியல்பு அம்சங்களைக் காட்டுகின்றன, அவை அந்த வாழ்விடத்திலுள்ள நீரின் உப்புத்தன்மை, மண் வகைகள் மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கலவையால் தீர்மானிக்கப்படுகின்றன. இவை பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடல், கழிமுகம், ஏரிகள், நதிகளை ஒட்டிய சதுப்பு நிலங்கள் உள்ளன. மீன் மற்றும் இறால் குளங்கள், பண்ணை குளங்கள், பாசன விவசாய நிலங்கள், உப்பு தொட்டிகள், நீர்த்தேக்கங்கள், சரளை குழிகள், கழிவுநீர் பண்ணைகள் மற்றும் கால்வாய்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் உள்ளன. ராம்சர் மாநாடு சதுப்பு நில வகைகளின் ராம்சர் வகைப்பாட்டை ஏற்றுக்கொண்டது, இதில் 42 வகைகள் அடங்கும், அவை 3 பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. கடல் மற்றும் கடலோர சதுப்பு நிலங்கள், உள்நாட்டு சதுப்பு நிலங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சதுப்பு நிலங்கள்.

புகைப்பட கண்காட்சி

‘யுனெஸ்கோ - உலக பாரம்பரிய மையம்’ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ம் தேதியை ‘உலக சதுப்பு நிலங்கள் தினமாக’ அனுசரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மட்டுமன்றி, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களை களைவதற்கு, சதுப்பு நிலங்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை உணர்ந்து, அந்நிலங்களைப் பாதுகாப்பதற்கும், அதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் உருவாக்குவதற்கும் பல்வேறு முயற்சிகளை யுனெஸ்கோ மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழக அரசின் அருங்காட்சியக துறை சார்பில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலங்கள், சரணாலயங்கள், சதுப்பு நிலக்காடுகள் ஆகியவற்றின் புகைப்படங்களை கொண்ட கண்காட்சி ஒன்றை நடத்துகிறது. மேலும், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் ஓவியம், கட்டுரை மற்றும் வாசகங்கள் உருவாக்குதல் போட்டிகளையும் நடத்துகிறது.

விழிப்புணர்வு அவசியம்

சதுப்பு நிலங்கள் மனிதர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்றன, நமது நீர் விநியோகத்தை வடிகட்டி தண்ணீரை வழங்குவது முதல் புயல்கள் மற்றும் வெள்ளங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது, பல்லுயிரியலை நிலைநிறுத்துவது மற்றும் கார்பனை சேமிப்பது வரை. 1970 முதல் 35% க்கும் மேற்பட்ட சதுப்பு நிலங்கள் சீரழிந்துவிட்டன அல்லது இழக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இழப்பு அதிகரித்து வருகிறது. உலக சதுப்பு நிலங்கள் தினம், சதுப்பு நிலங்கள் மனிதகுலத்திற்கும் கிரகத்திற்கும் எவ்வளவு உதவுகின்றன என்பது குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிப்பதையும், அவற்றின் பாதுகாப்பு, புத்திசாலித்தனமான பயன்பாடு மற்றும் மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நன்மைகள்

நீர் சேமிப்பு (வெள்ளக் கட்டுப்பாடு)

நிலத்தடி நீர் நிரப்புதல், நீர் சுத்திகரிப்பு

கடற்கரை நிலைப்படுத்தல், புயல் பாதுகாப்பு

பல்லுயிர் பெருக்கம், மகரந்த சேர்க்கை

பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா

காலநிலை மாற்ற குறைப்பு

கார்பன் பிரித்தெடுத்தல்

கடலோர மீள்தன்மை மற்றும் வாழ்வாதாரம்