Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வக்கீல் கடிதம் எழுதிய விவகாரம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான புகாரை அவரே விசாரிப்பதா?

* முன்னாள் நீதிபதி, வழக்கறிஞர்கள் கண்டனம், ஐகோர்ட் ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுரை: வழக்கறிஞர் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அவர் மீது புகார் கூறப்பட்ட வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதற்கு ஓய்வு நீதிபதி அரிபரந்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக செயல்பாட்டாளரும், ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புகள் சாதிய அடிப்படையில் ஒரு சார்பாக இருப்பதாக கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதம் தொடர்பான விபரங்கள் அதிமுக வக்கீல் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் செயல்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, அவர் நாளை (ஜூலை 28) மதியம் 1.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரை கே.கே.நகர் பகுதியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், வழக்கறிஞர் ஹென்றி திபேன், பார் கவுன்சில் இணைத்தலைவர் அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பங்கெடுத்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்பினர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரத்தில் நீதி கிடைக்க முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். கூட்டத்தின் முடிவில், நீதிபதி அரிபரந்தாமன் கூறியதாவது: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளது தனிப்பட்ட வாஞ்சிநாதனுக்கான பிரச்னை அல்ல. இது ஒட்டுமொத்தமாக, சாதாரண மனிதருக்குமான பிரச்னை. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய புகார் மனு, யாரோ ஒருவர் மூலமாக சமூக வலைதளத்தில் வெளியானால் அதற்கு புகார் கொடுத்த நபர் எப்படி பொறுப்பாக முடியும்?.

ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஜி.ஆர்.சுவாமிநாதனை பற்றிய ஒரு புகார் மனுவிற்கான வழக்கில், அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?  பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோகாய் அதற்குரிய வழக்கு ஒன்றில் அவரே நீதிபதியாக இருந்தபோது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அது போன்ற தவறை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் செய்யக்கூடாது.

அவ்வாறு செய்தால் தலைமை நீதிபதி தலையீடு செய்து இதனை தடுக்க வேண்டும். இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. திங்களன்று வரக்கூடிய, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி சுவாமிநாதனே கைவிட வேண்டும் அல்லது தலைமை நீதிபதி தலையிட்டு இதனை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு விஷயம் சார்ந்து முன்னோடியான போராட்டங்களை மேற்கொண்டது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் தான். அதேபோன்று நீதித்துறையில் சமூக நீதியை வலியுறுத்தி போராடியதும் தமிழ்நாடு தான்.

குறிப்பிட்ட விஷயத்தில் வாஞ்சிநாதன் பின் வாங்கினால் கூட வழக்கறிஞர்கள் இதனை விடுவதாக இல்லை. இவ்வாறு கூறினார். இதேபோல வழக்கறிஞர் சி.ராஜூ கூறுகையில், ‘‘நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என்பது அநீதியானது. ஜனநாயகத்திற்கும் சட்ட விரோதமானது. குற்றம் சாட்டப்படும் நபரே, விசாரணையை எடுத்து நடத்துவது தவறான முன்னுதாரணம்.

வழக்கறிஞர் சங்கங்கள் இதற்கு எதிராக போராட வேண்டும்’’ என்றார். வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு தலைமை நீதிபதி தான் இது குறித்து விசாரிக்க முடியும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் 10 பேர் விரைவில் கூட்டறிக்கை வெளியிடவுள்ளனர்’’ என்றார்.

* பஞ்சாயத்துகளில் கூட இந்த நடைமுறை இல்லை

தமுஎகச பொதுச்செயலாளர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கூறுகையில், ‘‘வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்புகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு ரகசிய முறையில் அனுப்பிய கடிதத்தின் நகல் சமூக வலைதளத்தில் வெளியானது என்பது மிகப் பெரிய பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

சாதாரண கிராம பஞ்சாயத்துகளில் கூட தலைவர் மீது புகார் வரும்போது, அவர் விசாரிப்பதில் இருந்து விலகிக் கொள்வார். ஆனால், ஜி.ஆர்.சுவாமிநாதனே அவர் மீதான புகாரை விசாரிப்பது சரியாக இருக்காது. இது வெகு மக்களிடம் நம்பிக்கை குறைப்பதாக உள்ளது’’ என்றார்.

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகாரை: பாஜ வக்கீல் வாட்ஸ்அப் குழுவில் அதிமுக வக்கீல் பகிர்ந்துள்ளார்: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றச்சாட்டு

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன் 14ல் ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அரசியல் சட்டவிரோத தீர்ப்புகள், மதச்சார்பின்மைக்கு எதிரான தீர்ப்புகள், சகோதரத்துவத்திற்கு எதிரான தீர்ப்புகளை தொகுத்து உரிய நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்திற்கு புகாராக அனுப்பியிருந்தேன். அப்புகாரை பொது வெளியிலோ, சமூக வலைதளத்திலோ நான் பகிரவில்லை. இது குறித்து நான் யாரிடமும் கூறவில்லை.

புகார் மனு அனுப்பி சுமார் ஒன்றரை மாதத்திற்கு பின் கடந்த 23ம் தேதி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாட்ஸ் அப் குழுவில் பாஜவைச் சேர்ந்தவர் அட்மினாக உள்ள வாட்ஸ்அப் குழுவில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பகிர்ந்துள்ளார்.  நான், மிக ரகசியமாக உச்சநீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அனுப்பிய புகார் சமூக வலைதளத்தில் வெளியானது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்வரும் காலங்களில் நீதிபதிகள் மீது யார் புகாரளிக்க முன்வருவர்? புகாரில் உள்ள எனது பெயர், முகவரி மற்றும் அடையாளங்களை மறைக்காமல் வழக்கறிஞரே பகிர்ந்தது எனது தொழில் மற்றும் எதிர்கால வாழ்க்கை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்த சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருப்பவர் மீது வழக்கறிஞர், பொதுமக்களிடம் குற்றச்சாட்டு இருந்தால் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை கோருவது இதுவரையில் இருந்த வழக்கமான அரசியல் சட்ட நடைமுறை தான். புகார் தெரிவிப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகாது. புகாரை பகிர்ந்தவர், அதை அனுமதித்தவர் என இரு வழக்கறிஞர்களும் நீதிமன்ற மாண்பை சீர்குலைத்து, நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளனர்.

இருவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஆச்சரியத்தை தருகிறது. அதேபோல், நீதிபதி சுவாமிநாதன் அவரை நான் விமர்சித்ததாக கூறி, அதற்கு விளக்கம் கேட்டுள்ளார். எந்தவொரு மனிதனும் அவரது வழக்கிற்கு அவரே நீதிபதியாக முடியாது என்பது அடிப்படை சட்ட நிலை. எனவே, நான் வழக்கறிஞராக ஆஜராகாத ஒரு வழக்கில், எனக்கு சங்கம் மூலம் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கும் நடைமுறை தவறானது.

திறந்த நீதிமன்றத்தில் என்னை கோழை என்றது நீதிமன்ற அவமதிப்பாகும். இது என் மீதான தாக்குதல் மட்டுமின்றி ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலாகும். யூடியூபர் சங்கர் வழக்கில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள இருவர், தன்னை நேரடியாக சந்தித்து அழுத்தம் கொடுத்ததாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அந்த இருவர் யார் என்பதை இன்றுவரை அவர் வெளியுலகில் சொல்லவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்காதது நீதிமன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். இவ்வாறு கூறினார்.