Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்சி தாவல் தடுப்பு விவகாரத்தில் சபாநாயகரின் தாமதம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும்: தெலங்கானா வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: தெலங்கானா பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து 10 எம்எல்ஏக்கள் ஆளும் காங்கிரசில் இணைந்தனர். இதற்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் கே.டி.ராமராவ், உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக நடந்த விசாரணையின் போது, ‘கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநில சட்டமன்ற சபாநாயகர் கட்சி தாவல் பிரச்னையை கடந்த காலத்தை போல நீண்ட காலத்திற்கு நிலுவையில் வைத்திருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த தாமதமும் இல்லாமல் ஒரு முடிவை எடுக்க வேண்டும். குறிப்பாக கட்சி தாவல் விவகாரம் மற்றும் சபாநாயகர் நடவடிக்கை ஆகியவை குறித்து ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம் எங்களது கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தாவிய எம்எல்ஏக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலையிலான அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவிய விவகாரம் தொடர்பாக அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை விவகாரத்தை 3 மாதத்துக்குள் தெலங்கானா சபாநாயகர் முடிவு செய்ய வேண்டும். இந்த தகுதி நீக்க நடவடிக்கை விவகாரத்தில் ஏதேனும் எம்எல்ஏக்கள் இழுத்தடிக்கும் நோக்கில் நடந்தால், சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்கலாம். மேலும் தகுதி நீக்க விவகாரத்தில் நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காகவே தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் முடிவு செய்ய அவரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. கட்சி தாவல் என்பது தேசிய அளவில் பேசப்படும் விவகாரமாக உள்ளது.

இதனை கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது ஜனநாயகத்தை சீர்குலைக்கும். குறிப்பாக சபாநாயகர் 10வது அட்டவணையின் கீழ் ஒரு தீர்ப்பளிக்கும் அதிகாரியாக மட்டுமே செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்ட விலக்குரிமையை வழங்கப்படவில்லை. அதேபோன்று சபாநாயகர்கள் கட்சித்தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் காலவரம்பின்றி செய்யும் காலதாமதம் என்பது, இந்திய ஜனநாயகத்தின் ஆபத்தை உருவாக்கும். எனவே கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் தற்போதைய வழிமுறையை நாடாளுமன்றம் மறுஆய்வு செய்யு வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.