Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை

தென்காசி: மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், பழைய குற்றாலத்தில் எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது குளித்துக் கொண்டிருந்த மாணவன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் கடந்த 3 நாட்களாக சிறிதளவு தண்ணீர் விழுந்த நிலையில், பழைய குற்றாலத்தில் நேற்று காலை முதல் தண்ணீர் நன்றாக விழுந்தது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுந்தது. தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று குற்றாலம் வருகை தந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் பழைய குற்றாலம் நோக்கி படையெடுத்தனர்.

மதியம் 2.30 மணியளவில் அருவியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தண்ணீர் வரத்து அதிகமாகி செம்மண் கலந்து கலங்கலாக தண்ணீர் கொட்டத் தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் இருந்து விலகி நின்றனர். அவர்கள் அருவியை ரசித்துக் கொண்டிருந்த போதே தண்ணீர் மேலும் அதிகரித்தது. இதனால் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு படிக்கட்டு வழியாக வேகமாக ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு அருவி அருகில் உள்ள பள்ளமான ஆற்றுப்பகுதியில் தள்ளப்பட்டனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும், கடைக்காரர்களும் சேர்ந்து துரிதமாக செயல்பட்டு கயிறு மூலம் பள்ளத்தில் ஆற்றில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது நெல்லை பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி ராம் நகரைச் சேர்ந்த மாணவரான அஸ்வின் (17) என்பவரை காணவில்லை என்று அவரது உறவினர் தென்காசி மேலகரத்தை சேர்ந்த அருண் என்பவர் கூறினார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து ஆற்றுப்பகுதியில் மாயமான மாணவனை தேடினர்.  இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தை கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்த சூழலில் நீரில் அடித்து செல்லப்பட்ட அஸ்வின், பழைய குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகே ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பழைய குற்றாலம் அருவியில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய வெள்ளப் பெருக்கு மாலை 5.30 மணி வரை நீடித்தது.

சுமார் 3 மணி நேரம் வெள்ள நீர் படிகளைத் தாண்டி வெளியேறியது. பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நெல்லை மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அனைத்து அருவிகளிலும் போலீசார், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு நிறுத்தப்பட்டனர்.

* அடித்துச் செல்லப்பட்டது எப்படி?

நெல்லை என்ஜிஓ காலனி ராம் நகரை சேர்ந்தவர் குமார். இவர், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஸ்வின் (17), நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் தென்காசியில் மேலகரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். அருவிகளில் தண்ணீர் விழுந்த நிலையில் பாட்டி வீட்டில் உள்ள உறவினர்களுடன் அருவியில் குளிக்க வந்தார்.

வெள்ளம் அதிகரிப்பதை பார்த்து அவரது மாமா அருண் கையை பிடித்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். ஆனால் தண்ணீர் அதிகமாக வந்ததால் மாமா அருண் படிக்கட்டில் தவறி கீழே விழுந்தார். அப்போது அவரது கைப்பிடியில் இருந்து விலகி வெள்ள நீரில் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து சிறுவன் நீரில் அடித்துச் செல்வதை பார்த்து கூச்சலிட்டார். தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் 3 கி.மீ தூரம் வரை தேடி பார்த்தனர். இறுதியில் பழைய குற்றாலம் அருவி கட்டண கழிப்பறை அருகே சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது.

* எதிர்பாராமல் கொட்டிய வெள்ளம்

குற்றாலத்தில் பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவியில் எப்போதும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் இருப்பர். அவர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருப்பர். அதிக நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் குளிக்க தடை விதிக்கப்படும். அப்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் நேற்று பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் கணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

* 2ம் ஆண்டுக்கு பின் மீண்டும் உயிரிழப்பு

கடந்த 2022ம் ஆண்டு குற்றாலம் மெயினருவியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகினர். தற்போது பழைய குற்றாலத்திலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாணவர் அடித்துச் செல்லப்பட்டு பலியாகி உள்ளார்.