ராமநாதபுரம்: வாலிநோக்கம் அருகே குடிசைகளில் மின் இணைப்பு வசதி இல்லாததால் மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், வாலிநோக்கம் பஞ்சாயத்து, சாத்தையாகோவில் குக்கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் சுமார் 100 வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4 தலைமுறையாக அரசு நிலத்தில் குடிசை வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இங்குள்ள குடியிருப்புகளில் மின் இணைப்பு வசதி இல்லை. இதனால் மாணவர்கள் இரவில் குடிசைகளில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பாடங்களை படித்து வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்களது குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். இதற்காக எங்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடலாடி வருவாய்த்துறையினர் கூறுகையில், `வாலிநோக்கம் சாத்தையா கோவில் பகுதியில் குடிசைகளில் வசித்து வந்தவர்களுக்கு அருகே அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் சுனாமி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இருப்பினும் அதே குடிசைகளில் வசித்து வருகின்றனர். பட்டா கேட்டு வருகின்றனர். இந்த பகுதி அரசு வருவாய்த்துறை கணக்கில் சாத்தார்கோவில் வட்ட கிணறு என தாக்கலாகி வருவதால் தனி நபர்களுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்குவதில் நிர்வாக சிக்கல் உள்ளது என்று தெரிவித்தனர்.