Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைந்து உள்ளனர். சமீபத்தில் தெரு நாய்க்கு பிஸ்கட் அளித்த சிறுவன் ஒருவனை நாய் கடித்துக் குதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குமரி மாவட்டத்திலும் பல்வேறு ஊராட்சிகள், பேரூராட்சிகளில் நாய்கள் பிடிக்கப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சியிலும் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாய்கள் கருத்தடை மற்றும் பராமரிப்புக்காக தெங்கம்புதூரில் ஏ.பி. சி. சென்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்படும். இந்த சென்டர் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

இந்தநிலையில் சமீப காலமாக நாகர்கோவில் மாநகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருக்கிறது. தெருக்கள் மட்டுமின்றி தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் நாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. இவ்வாறு வரும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை விரட்டுவதுடன் சிறுவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடந்து சென்றால் அவர்கள் மீதும் பாய்ந்து பதம் பார்க்கும் நிலை உள்ளது. நாய்களை கண்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தெருக்களில் பகல் வேளையில் நடந்து செல்பவர்களையும் விடாமல் நாய்கள் பதம் பார்த்து வருகின்றன. நாகர்கோவில் மாநகரை பொறுத்தவரை வடசேரி, கிருஷ்ணன் கோவில், கோட்டாறு, மீனாட்சிபுரம், ஆசாரி பள்ளம், ராமன்புதூர் கார்மல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை வேளையில் நடைபயிற்சி செய்பவர்கள் அதிகம் உள்ளனர்.

இவர்களையும் நாய்கள் விடாமல் துரத்தும் நிலை உள்ளது. நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்திற்குள் நடைபயிற்சிக்கு வருபவர்களையும் நாய்கள் தொந்தரவு செய்து வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே நாய்களை உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் பிடித்து கருத்தடை செய்ய கொண்டு செல்லும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் விலங்குகள் ஆர்வலர்கள் என்ற பெயரில் சில போலி அமைப்புகள் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் நாய்களைப் பிடிக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் .மேலும் வன விலங்குகள் ஆர்வலர்கள் என்ற பெயரில் பல போலி அமைப்புகளை சேர்ந்தவர்கள் மிரட்டி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.