திருமலை: தெலங்கானாவில் நாகதேவதை சிலை மீது நாகப்பாம்பு ஏறி நின்று படமெடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம், ஒடேலா கிராமத்தில் உள்ள பார்வதி ஜம்புலிங்கேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நாக தேவதை சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த நாக தேவதை சிலை மீது திடீரென நாகப்பாம்பு ஏறி படமெடுத்து ஆடியபடி நின்றது. இதனை அங்கிருந்த பக்தர்கள் பார்த்து, நாக தேவதை வந்ததுபோல் பக்தி பரவசமடைந்தனர்.
மேலும் இதை பார்த்த சில பக்தர்களுக்கு அருள் வந்து ஆடினர். பக்தர்கள் இதை ஆர்வமாக செல்போனில் போட்டோ வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பதிவு செய்தனர். நாக தேவதையின் சிலை மீது பாம்பு இருப்பதை பார்த்த பக்தர்கள் சிவபெருமானின் மகிமை எனக்கூறி சிறப்பு பூஜை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரளாக திரண்டு வந்து பார்வையிட்டு வழிபட்டனர்.
ஆனால் பாம்பு அங்கிருந்து நகரவில்லை. பக்தர்கள் அதனை விரட்ட முயன்றனர். ஆனாலும் அந்தப் பாம்பு போகவில்லை. பாம்பு சிலையுடன் இணைந்திருந்தது. பாம்பு வெகுநேரம் செல்லாததால், பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாம்பை பிடித்து தொலைதூரத்தில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் மீண்டும் இந்த பகுதிக்கு பாம்பு வர வாய்ப்பு உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.