Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

15ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை வருகிற 15ம் தேதி சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த திட்டம் முதற்கட்டமாக ஜூலை 15 முதல் 15.8.2025 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் 3,570 முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பணிகள், விண்ணப்பம் மற்றும் தகவல் கையேட்டினை வழங்கும் பணியை 28,370 தன்னார்வலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த தகவல்களை வீடு வீடாக வழங்கி வருகிறார்கள். மேலும் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற 15ம் தேதி இந்த திட்டம் தொடங்க இருக்கும் நிலையில், முகாம் தொடர்பான முன்னேற்ற பணிகள், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது சரியான தீர்வினை வழங்கும் வகையில் அர்ப்பணிப்புடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களை பெற்று, அதனை தொடர்ந்து நடைபெறும் 10,000 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் ஊரக பகுதிகளில் 46 சேவைகளும் - நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.