Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட ரயில்களின் எண்கள் மாற்றம்: சிறப்பு ரயில்கள் அந்தஸ்தை இழக்கின்றன

நெல்லை: தென் மாவட்டங்களில் பயணிக்கும் முன்பதிவில்லாத ரயில்களின் எண்கள் கொரோனா காலத்திற்கு பின்னர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை 1ம்தேதி முதல் புதிய எண்கள் அமலுக்கு வருகின்றன. இந்திய ரயில்வேயை பொறுத்தவரை கொரோனா காலத்தில் அதன் சேவைகளிலும், வருவாயிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 2020 மார்ச் தொடங்கி ஓராண்டுக்கு ரயில்வேயின் பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கியபோது, அவற்றை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களாக இயக்கினர். அந்த ரயில்களுக்கான கட்டணமும் ரூ.30 வரை உயர்த்தப்பட்டது. இக்கட்டத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் பாஜ அரசு கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, பயணிகள் ரயிலில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை மீண்டும் குறைத்து பயணிகள் வயிற்றில் பால் வளர்த்தது. ஆனால் ரயில்களின் எண்களை மாற்றிட அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா காலத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததுபோல், ரயில்களின் எண்கள், பயணிகள் ரயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை 1ம் தேதி முதல் புதிய எண்கள் நடைமுறைக்கு வருகின்றன. அந்த வகையில் நெல்லை- திருச்செந்தூர் ரயில் எண்.06409, வரும் 1ம் தேதி முதல் 56003 என மாற்றப்படுகிறது. திருச்செந்தூர்- நெல்லை ரயில் எண்.06674 வரும் 1ம் தேதி முதல் 56004 என மாற்றம் பெறுகிறது. நாகர்கோவில்- நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலின் எண்.56707 (பழைய எண்.06641) என மாற்றப்படுகிறது. நெல்லை- நாகர்கோவில் ரயிலின் எண்.56706 (பழைய எண்.06642) என மாற்றப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி- நெல்லை ரயில் எண்.56721 (பழைய எண்.06667), நெல்லை- தூத்துக்குடி ரயில் எண். 56722 (பழைய எண்.06668) என மாற்றம் பெறுகின்றன.

தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்லும் ரயிலின் எண்.56723(பழைய எண்.06671) எனவும், வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயிலின் எண்.56724( பழைய எண்.06672), திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் பயணிகள் ரயிலின் எண்கள்.56728, 56730, 56734 (பழைய எண்கள் முறையே 06405, 06676, 06678) எனவும். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்களின் எண்கள் 56727, 56729, 56733 (பழைய எண்கள் முறையே 06673, 06675, 06677) மாற்றம் செய்யப்பட உள்ளன. கன்னியாகுமரி-புனலூர், செங்கோட்டை- மதுரை என தெற்கு ரயில்வே சுமார் 288 பயணிகள் ரயில்களின் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வரும் 1ம் தேதிக்கு பின்னர் எண்கள் மாற்றத்தை அறிந்து கொண்டு பயணிகள் ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.