நாகை அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த கடல் நீரால் நெற்பயிர்கள் சேதம்: சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை
நாகை: நாகை அருகே கடல் நீர் மானாவாரி விளைநிலங்களுக்குள் புகுந்ததால் சுமார் 100 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து இருக்கிறது. நாகை மாவட்டத்தில் 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவதோடு கடலும் சீற்றத்தோடு காணப்படுகிறது. இதனால் வேளாங்கண்ணி அடுத்த பிரதாப ராமபுரம் கிராமத்தில் கடலோர மானாவாரி பகுதிகளில் கடல்நீர் புகுந்து சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
100 ஏக்கரில் கடல் உப்பு நீர் புகுந்ததால் 20 நாட்களே ஆன இளம் நெற்பயிர்கள் அடியோடு அழுக துவங்கியுள்ளன. இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளை நிலங்களில் கடல்நீர் புகுவதை தடுக்க கடற்கரை ஓரங்களில் கருங்கற்களை கொட்டி தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


