Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திடீர் புகைமூட்டம்: அலறியடித்து வெளியேறிய நோயாளிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் நாப்கின் எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் புகையால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் மாடியில் குழந்தைகள் நல பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை திடீரென புகை மூட்டமாக காட்சியளித்தது. இதை அடுத்து தீ விபத்து ஏற்பட்டதாக நினைத்து அங்கிருந்த நோயாளிகள் அலறி அடித்துக் கொண்டு குழந்தைகளுடன் வெளியேற துவங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக புரளி பரவியது.

உடனடியாக அங்கு வந்த டீன் சுகந்தி ராஜகுமாரி அப்பகுதியை பார்வையிட்டு நோயாளிகளை பதட்டமடைய வேண்டாம் என அறிவுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகள் பயன்படுத்திய நாப்கின் எரிக்கும் இயந்திரத்தை எலெக்ட்ரீசியன்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் பயன்படுத்திய நாப்கினை போட்டு எரித்து சோதனை செய்தனர். அதன் புகை குழாய் வழியாக மேலே செல்லாமல், திடீரென கீழே வந்தது. உடனடியாக எலக்ட்ரீசியன்கள் அந்த இயந்திரத்தை ஆப் செய்து விட்டனர்.

ஆனால் அந்த இடம் சிறிது நேரத்திற்கு புகை மூட்டமாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல் பரவியுள்ளது. அங்கு வந்த செவிலியர்கள் மற்றும் பணியாளர்களும் புகை மூட்டத்தைப் பார்த்து பாதுகாப்பு கருதி நோயாளிகளை வெளியே செல்ல வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் புகை வெளியேறி இயல்பு நிலை வந்து விட்டது. அந்த இயந்திரத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், உறவினர்கள் பதட்டமடையவோ, அச்சமடையவோ தேவையில்லை’’ என்றார். இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.