Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் வணிக உரிமங்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சி அமைந்ததும் 2021ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் நவ 14ம் தேதி வரை மூன்று மாத காலத்திற்குள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லை என்று அரசு சலுகை அளித்தது. இந்த சேவையை 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்தோம். இதனால் 40 ஆயிரத்து 994 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்தனர்.

இதுவரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டம், தமிழ்நாடு மதிப்பும் கூட்டு வரிச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த கூட்டத்திற்குள் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கப்பட வேண்டும். திமுக அரசு அமைந்த பிறகு இந்த வாரியத்தின் மூலமாக ஏராளமான நலத்திட்ட முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளன.

* கல்வி உதவித் தொகையாக ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5 ஆயிரமும், தொழிற்கல்வியாக இருந்தால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 94 மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர்.

* வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்ட நிதியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்.

* வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மரணம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்ட நிதி உதவியை ரூ.3 லட்சமாக உயர்த்தியுள்ளோம். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 390 குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

* வியாபார நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டால், ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட்ட நிதியை ரூ.20 ஆயிரமாக உயர்த்தினோம்.

* விபத்து உதவியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளோம்.

* இதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவ சான்றின் பேரில் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

* பெண் உறுப்பினர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

* நலிவுற்ற வணிகர்கள் திட்டத்தின் கீழ் பெட்டிக்கடை அல்லது மூன்று சக்கர மிதிவண்டி வாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

* இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 8 ஆயிரத்து 883 வணிகர்கள் பல்வேறு நிதி உதவிகளைப் பெற்றுள்ளார்கள். 3 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் இது போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக விக்கிரமராஜா மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். இதுபோன்ற செயல்களை நாங்கள் சொல்லி, நீங்கள் செய்வதாக இல்லாமல், நீங்களே முன்வந்து செய்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழை காண முடியவில்லை என்று யாரும் சொல்லக் கூடாது. அந்த அளவுக்கு பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் அடிக்கடி என்னை வந்து சந்திப்பார்கள். அவர்கள் வைக்கின்ற கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். சமீபத்தில் கூட உள்ளாட்சி அமைப்புகளால் கடைகளுக்கு திறப்பு விழா, ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் வணிக உரிமங்கள் கடந்த ஏப்.1ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்ற வகையில் இதற்குரிய விதிகள், திருத்திய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் கடைகளுக்கான குத்தகை 9 ஆண்டுகள் என்று இருந்ததை 12 ஆண்டுகள் என விதிகளில் திருத்தம் செய்து இது வரும் ஆக.1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வணிகவரி ஆணையர் ஜகந்நாதன், நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணன்உன்னி, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.