தேசம் தான் முதலில் என்று முழங்கிய கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க எம்பி சசிதரூருக்கு தடை: கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரடி
புதுடெல்லி: தேசம் தான் முதலில் என்று முழங்கிய சசிதரூர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்க முடியாது என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரடியாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூருக்கும், கேரள காங்கிரஸ் தலைமைக்கும் இடையே நீண்ட நாட்களாகவே பனிப்போர் நிலவி வருகிறது. முன்னதாக நெருக்கடி நிலை குறித்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த மோதல், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது. பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை முன்வைத்து, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி மோடி அரசை கடுமையாக விமர்சிக்க காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக அமெரிக்காவுக்குச் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவுக்குத் தலைமை தாங்கிய சசி தரூர், ‘கட்சியைவிட தேச நலனே முதன்மையானது. தேசத்தின் பாதுகாப்புக்காக மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது அவசியம். தேசம் முதலில் என்ற நிலைப்பாட்டை என்னுடைய கட்சியினரே துரோகமாகப் பார்க்கிறார்கள். ஆனாலும், எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்பேன்’ என்று கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். சசி தரூரின் இந்த நிலைப்பாட்டால் கொந்தளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.முரளீதரன் அளித்த பேட்டியில், ‘தேசியப் பாதுகாப்பு தொடர்பான தனது நிலைப்பாட்டை சசி தரூர் மாற்றிக்கொள்ளும் வரை, திருவனந்தபுரத்தில் நடைபெறும் எந்தவொரு கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அவர் அழைக்கப்பட மாட்டார்.
அவர் எங்களோடு இல்லை. எனவே, அவர் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக இருக்கும் அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை தேசியத் தலைமை முடிவு செய்யும்’ என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே ‘கேரளாவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் சசி தரூர்தான்’ என்று சசிதரூர் ஆதரவாளர்கள் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டனர். இதுகுறித்து மூத்த தலைவர் கே.முரளீதரன் அப்போது கூறுகையில், ‘முதலில் அவர் (சசிதரூர்) எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதை முடிவு செய்யட்டும். காங்கிரஸ் கட்சியில் இருப்பது அவருக்கு கட்டுப்பாடு இருப்பதாக உணர்ந்தால், அவர் வேறு அரசியல் பாதையைத் தேர்வு செய்துகொள்ளலாம்’ என்றார்.