Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலியல் புகாரில் தீக்குளித்து பலி ஒடிசா மாணவி தந்தைக்கு ராகுல் காந்தி ஆறுதல்: காங்கிரஸ் துணை நிற்கும் என உறுதி, இன்று முழு அடைப்பு போராட்டம்

புதுடெல்லி: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்த 20 வயதான மாணவிக்கு அந்தக் கல்லூரியின் கல்​வி​யியல் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய​ சமிரா குமார் சாகு, தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த 12ஆம் தேதி மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தார். இதில் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை காலமானார்.

இந்த நிலையில் பலியான மாணவியின் தந்தையிடம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் நானும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற உறுதியை அளித்தேன். நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, அது முழு சமூகத்துக்கும் ஒரு காயம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு முழுமையான நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்’ என தெரிவித்துள்ளார்.

இன்று முழு அடைப்பு: இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரி, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று ஒடிசாவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே மாணவியின் மரணத்திற்கு பொறுப்பேற்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, ஒடிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தினார்.

* போலீசாருடன் மோதல்: கண்ணீர்குண்டு வீச்சு

ஒடிசாவின் பாலசோர் கல்லூரி மாணவி தீக்குளித்து பலியான விவகாரத்தில் பிஜூ ஜனதா தளம் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல பிஜு ஜனதா தளத் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் காயமடைந்தனர். பிஜேடி தொண்டர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.