Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18க்கு குறைவாக இருக்கக்கூடாது: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

டெல்லி: பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ சம்மத வயதை 18லிருந்து 16ஆக குறைக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசுக்கும், நிபுன் சக்சேனா என்பவருக்கும் இடையிலான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எழுத்துப்பூர்வமாக தனது கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயதுவரம்பு 70 ஆண்டுகளாக 16 வயதாக இருந்தது. ஆனால், கடந்த 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் திருத்த சட்டத்தில், அந்த வயது 18 ஆக உயர்த்தப்பட்டது. பருவ வயதினரிடையே பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் உறவுகள், தற்போதைய சட்டத்தால் வயதை காரணம் காட்டி குற்றமாக்கப்படுவதாக அவர் வாதிட்டுள்ளார். இந்திரா ஜெய்சிங் தனது வாதத்தில், 18 வயதுக்குட்பட்டவர்கள் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும் அது குற்றமாக பார்க்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார். இன்றைய இளம் பருவத்தினர் காதல் மற்றும் பாலியல் உறவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவர்கள் என்றும், அவர் கூறினார்.

மேலும், டீனேஜர்களிடையே பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் பாலியல் உறவுகளை குற்றமாக்குவது தன்னிச்சையானது என்றும், அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், அவர் தெரிவித்தார். 16 முதல் 18 வயதுக்குட்பட்ட பருவ வயதினரிடையே பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு துஷ்பிரயோகம் அல்ல என்றும், அதை POCSO உள்ளிட்ட சட்டங்களில் இருந்து விலக்க வேண்டும் என்றும் அவர் உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில், பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18க்கு கீழ் குறைக்கப்பட முடியாது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 18 வயது வரம்பு, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் நாடாளுமன்றம் கவனமாக எடுத்த தீர்மானமாகும் என்றும், இது இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ளார்ந்த பாதுகாப்பாகும் என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. எனவே, சம்மத வயது குறைப்பது சாத்தியமில்லை என ஒன்றிய அரசு நிச்சயமாக கூறியுள்ளது.