Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துறை தலைவரின் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி: காப்பாற்ற முயன்ற மாணவர் காயம்

பாலசோர்: ஒடிசாவில் துறை தலைவரின் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி ஆபத்தான நிலையில் காப்பாற்ற முயன்ற மாணவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் கல்லூரியில், ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு, அவரது துறைத் தலைவரான சமீர் குமார் சாஹு என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால், அவரது எதிர்காலத்தை பாழாக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, கடந்த 1ம் தேதி கல்லூரியின் உள்விசாரணைக் குழுவிடம் புகார் அளித்துள்ளார்.

ஏழு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவி தன்னைச் சந்தித்து, மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகக் கூறியதாகவும், துறைத் தலைவரை அழைத்து விசாரித்தபோது அவர் குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும், மாணவி தனது புகாரில் உறுதியாக இருந்ததாகவும் கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறை தலைவர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நேற்று சக மாணவர்களுடன் கல்லூரி வாயிலில் அந்த மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே ஓடிய அவர், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீப்பற்றிய நிலையில் கல்லூரி வளாகத்தில் ஓடும் அவரது காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற சக மாணவர் ஒருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த கோர சம்பவத்தில், மாணவிக்கு 95% தீக்காயங்களும், அவரைக் காப்பாற்ற முயன்ற மாணவருக்கு 70% தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளன.

இருவரும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை, துறைத் தலைவர் சமீர் குமார் சாஹு மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், துறைத் தலைவரை காவல்துறை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.